கோவிலில் திருடிய இருவர் கைது; ஏழரை கிலோ வெள்ளிக் கவசம் பறிமுதல்
கோவிலில் திருடிய இருவர் கைது; ஏழரை கிலோ வெள்ளிக் கவசம் பறிமுதல்
ADDED : மார் 04, 2024 06:08 AM

வானுார், : வானுார் அருகே கோவிலில் திருடிய இருவரை போலீசார் கைது செய்து, ஏழரை கிலோ அம்மன் வெள்ளிக் கவசத்தை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நெமிலி பச்சைவாழியம்மன் கோவிலில், கடந்த மாதம் 17ம் தேதி இரவு, மர்ம நபர்கள் புகுந்து, அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த ஏழரை கிலோ வெள்ளிக் கவசம் மற்றும் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் சிவராஜன் தலைமையில் போலீசார் திருவக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரிடம் விசாரித்தனர்.
அவர்கள் கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தைச் சேர்ந்த சுந்தரவேல், 38; பெரியகோட்டிமுளை கண்மணிராஜா, 39; என்பதும், பச்சைவாழியம்மன் கோவிலில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
அதன்பேரில் இருவரையும் போலீசார் கைது செய்து, திருவக்கரை கோவில் பின்புறமுள்ள மலை அடிவாரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஏழரை கிலோ சாமி வெள்ளிக் கவசத்தை பறிமுதல் செய்தனர்.

