ADDED : ஏப் 23, 2025 12:48 AM
சென்னை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட, கன்னுக்குட்டி மற்றும் தாமோதரன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர். கடந்தாண்டு ஜூன் 19ல், இந்த சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய, 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சுந்தர் மோகன் முன் நடந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில், 'இந்த வழக்கு விசாரணை, மூன்று மாதங்களில் முடிக்கப்படும். வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன், கன்னுக்குட்டிக்கு ஜாமின் வழங்கக் கூடாது' என்று, தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், 'கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர். நீதிமன்றம் விதிக்கக்கூடிய நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளோம். எனவே, ஜாமின் வழங்க வேண்டும்' என்று வாதாடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி, மறு உத்தரவு வரும் வரை, விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக உத்தரவிட்டார்.

