ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.100 கோடி மோசடி: இருவர் கைது
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.100 கோடி மோசடி: இருவர் கைது
ADDED : நவ 15, 2025 11:50 PM

சென்னை: நாடு முழுதும், 'ஆன்லைன் டிரேடிங்' வாயிலாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை பெருங்குடியில் வசிக்கும் கார்த்திக், 36 என்பவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் . கடந்த மார்ச்சில் சமூக வலைதளத்தில் வந்த, 'ஆன்லைன்' முதலீடு விளம்பரத்தை பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டு இருந்த, 'வாட்ஸ் ஆப்' குழுவில் இணைந்தார்.
அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய, 'லிங்' வாயிலாக, முதலீடு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார்.
அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என, சந்தேக நபர்கள் சொன்ன ஆசை வார்த்தையை நம்பி, அவர்கள் சொன்னபடி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, பல்வேறு தேதிகளில், 1.43 கோடி ரூபாய் செலுத்தி உள்ளார்.
அவர் செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போல, முதலீடு செய்யப்பட்டது போல, மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் அச்செயலியில் காண்பித்துள்ளனர்.
வழக்குப் பதிவு அதன்பின், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது, வெவ்வேறு காரணங்களை கூறி, மேலும் பணம் கேட்டு வற்புறுத்தி உள்ளனர்.
அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்தி, சென்னை போலீஸ் கமிஷனர் அலு வலகத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வங்கி கணக்கு விபரங்கள் மூலம் விசாரித்ததில், சூர்யா ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன்படி, சூர்யா ஸ்ரீனிவாஸ், 50, தனியார் நிறுவன வங்கி மேலாளர் சேஷாத்ரி எத்திராஜ், 43, தினேஷ், 29, அருண்பாண்டியன், 33 ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏமாற வேண்டாம் இந்த சம்பவத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் குற்ற சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட, சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஸ்ரீநாத் ரெட்டி, 49, அவரது அலுவலக ஊழியர் அனிதா, 40 ஆகியோரை, 13ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, இரண்டு கணினிகள், நான்கு மொபைல் போன்கள், 12 ஏ.டி.எம்., கார்டுகள், 33 சிம் கார்டுகள், 10 காசோலை புத்தகங்கள், 6 ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், ஸ்ரீநாத்ரெட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் ஐந்து நிறுவனங்களை உருவாக்கி, 30க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை ஆரம்பித்து, சர்வதேச சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்து, 100 கோடி ரூபாய்க்கு மேல், நாடு முழுதும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற 'ஆன்லைன்' முதலீடுகளை நம்பி ஏமாற வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

