கோவில் நகை திருடி விற்பனை காரைக்குடி அருகே இருவர் கைது; 100 பவுன் பறிமுதல்
கோவில் நகை திருடி விற்பனை காரைக்குடி அருகே இருவர் கைது; 100 பவுன் பறிமுதல்
ADDED : நவ 24, 2024 07:50 PM

காரைக்குடி:காரைக்குடி அருகே கருவியப்பட்டியில், கோவில் நகை திருடிய நபர், அவரிடம் இருந்து நகையை வாங்கியவர் என இருவர் கைது செய்யப்பட்டனர். 100 பவுன் நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கருவியபட்டியை சேர்ந்தவர் சேதுராமன் 70. இவர் அவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயில் நிர்வாக தலைவராக உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் கோவையில் வசித்து வருகிறார். அங்கு, நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.
கருவியப்பட்டியில் உள்ள இவரது வீடு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் சேதுராமன் மற்றும் பள்ளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சேதுராமன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தங்க நகை திருடு போனது தெரிய வந்தது.
வைரம் பதித்த 100 பவுன் நகைகள் என்றும், அனைத்தும் கோவிலுக்கு சொந்தமான நகைகள் என்றும் சேதுராமன் தெரிவித்தார். பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறினர்.
இந்நிலையில் வீட்டை சுற்றி இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது சேதுராமனின் எதிர் வீட்டைச் சேர்ந்த சுரேஷ் 30 என்பவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் திருட்டு நகைகளை வாங்கிய காரைக்குடியைச் சேர்ந்த சோமசுந்தரம், 49 என்பவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கோயில் நகை உட்பட 103 பவுன் தங்க, வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.