இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு, முள்ளெலி, குள்ளநரி பாதுகாப்பு திட்டம்
இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு, முள்ளெலி, குள்ளநரி பாதுகாப்பு திட்டம்
ADDED : மார் 29, 2025 04:56 AM

சென்னை: ''தமிழகத்தில் இருவாச்சி பறவைகள், சிங்கவால் குரங்கு, தென்னிந்திய முள்ளெலி, குள்ளநரி பாதுகாப்பு திட்டங்கள், வரும் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
அரியவகை பறவையான, இருவாச்சி பறவைகளை பாதுகாப்பதற்கான திட்டம், வரும் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும். இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும்
சிங்கவால் குரங்கு, தென்னிந்திய முள்ளெலி, கழுதைப்புலி, செந்துடுப்பு காவிரி மீன் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு திட்டம், ஒரு கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
வனப்பாதுகாப்பு, வன உயிரினங்கள் பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை குறித்து, 3 கோடி ரூபாயில் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு 'இளம் இயற்கை காவலர்கள்' என்ற சான்றிதழ் அளிக்கப்படும்
சென்னை கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, கடல்சார் உயரடுக்கு படை உருவாக்கப்படும்
வண்டலுாரில் உள்ள, வன உயிரின மேம்பாட்டு அறிவியல் நிறுவனத்தில், 1.50 கோடி ரூபாயில் இரண்டு உயர் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்
அழிவின் விளிம்பில் உள்ள குள்ளநரிகளை பாதுகாக்க, குள்ளநரி பாதுகாப்பு திட்டம்; தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில், நீர்நாய் ஆய்வு மற்றும் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
கடலாமைகள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்களை அறிய 'டெலிமெட்ரி' தொழில்நுட்ப ஆய்வுகள், 84 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்படும்
சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை நகரங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில், ஆதிவனங்களை மேம்படுத்தும் திட்டம், 2 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மனித - வன விலங்கு மோதலை தடுக்க, 31 கோடி ரூபாயில் 'எக்கு' கம்பி வேலி அமைக்கப்படும்
சந்தனம், ஈட்டி மரங்களை பொது மக்கள் வளர்ப்பதை ஊக்குவிக்க, வளர்ந்த மரங்களை வெட்டி விற்பதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் மற்றும் சேலத்தில், பசுமை பரப்பை அளவீடு செய்ய, மரங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்
திண்டுக்கல் மாவட்டத்தில், யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க, 20 நபர்கள் அடங்கிய சிறப்பு அதிரடிபடை, ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்படும்
திண்டுக்கல் மாவட்டத்தில், 1,60 கோடி ரூபாய் செலவில், விவசாய நிலங்களை ஒட்டி, 20 கி.மீ., தொலைவுக்கு, தொங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்கப்படும்
இவ்வாறு அவர் அறிவித்தார்.