மத்திய அரசை கண்டித்து மொபைல் டவரில் ஏறி விவசாயி இருவர் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து மொபைல் டவரில் ஏறி விவசாயி இருவர் போராட்டம்
ADDED : பிப் 22, 2024 07:22 PM

பெரம்பலுார்: அரியலுார் அருகே, மத்திய அரசை கண்டித்து இரண்டு விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் பல்வேறு விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மீது டில்லி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 21 வயதுள்ள ஒரு விவசாயி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதற்கு காரணமான மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும், விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டு வீசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அரியலுார் மாவட்டம், திருமானுார் அடுத்த சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில், அகில் இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம், மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி ஆகிய இரு விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்த, திருமானுார் இன்ஸ்பெக்டர் கோசலராமன், அரியலுார் தாசில்தார் ஆனந்தவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரின் உதவியுடன் விவசாயிகள் இருவரும் கீழிறக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சேனாபதி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.