இரு காஸ் சிலிண்டர் இணைப்பு அனைவருக்கும் உண்டு ஐ.ஓ.சி., விளக்கம்
இரு காஸ் சிலிண்டர் இணைப்பு அனைவருக்கும் உண்டு ஐ.ஓ.சி., விளக்கம்
ADDED : பிப் 12, 2025 12:42 AM
சென்னை:அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், இரு சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுவதாக, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு பண்டக சாலைகளில், வீடுகளுக்கு இரு சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுவதில்லை என்ற, புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. உடன், இந்தியன் ஆயில் நிறுவனம் அளித்து உள்ள விளக்கம்:
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், இரு காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும் இதுவரை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காஸ் ஏஜன்சிகள் வாயிலாக, சென்னையில், 88 இரு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை நகர் முழுதும், இந்தியன் ஆயிலின் காஸ் ஏஜன்சிகள் உள்ளன. அவை, வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றன. அவை, வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கி, எந்த ஒரு குறைகளுக்கும் உடனடி தீர்வு காணும் வகையில் செயல்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் புகார் தொடர்பான சேவைகளை பெற, 1800 2333 555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், சென்னை அலுவலக வாடிக்கையாளர் சேவை மையத்தை, 044 2433 9236 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இதுதவிர, வாடிக்கையாளர் கருத்து மற்றும் புகாருக்கான பதிவேடு அனைத்து காஸ் ஏஜன்சிகளிலும் கிடைக்கிறது. அங்கு, இந்தியன் ஆயில் அதிகாரிகளின் தொடர்பு விபரங்களும் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.