டிரைவரை கத்தியால் குத்தி கார் கடத்திய இருவருக்கு ‘வலை’
டிரைவரை கத்தியால் குத்தி கார் கடத்திய இருவருக்கு ‘வலை’
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 09:48 PM
திருச்சி: டிரைவரை கத்தியால் குத்தி, வாடகை காரை கடத்திய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர், முத்துராஜபுரத்தைச் சேர்ந்தவர் மோகன், 66. இவர், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நிறுத்தத்தில் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10 மணியளவில், 40 வயது மதிகக்கத்தக்க இருவர், மணப்பாறை செல்ல கார் கேட்டுள்ளனர்.
இதையடுத்து, கார் ஸ்டாண்டில் இருந்த ஜெயராமன், 75, என்பவரை துணைக்கு அழைத்துக் கொண்டு, ‘இண்டிகா’ காரில், அவர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளார்.
கார், மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளிப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, இயற்கை உபாதைக்காக காரை நிறுத்த சொல்லி உள்ளனர். டிரைவர் மோகனும் காரை நிறுத்தி, காரில் இருந்து இறங்கிய இருவரும், டிரைவரையும், அவருடன் வந்த ஜெயராமன் என்பவரையும் தாக்கியுள்ளனர்.
அப்போது ஜெயராமன் தப்பியோடி விட்டார். அங்கிருந்த மோகனை, வந்தவர்களில் ஒருவர் கத்தியால் வலதுபக்க விலாவில் குத்தியதில், அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து, இருவரும் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.
அவ்வழியே வந்தவர்கள் கார் டிரைவர் மோகனை, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து, காரை கடத்திச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.
