UPDATED : நவ 18, 2026 05:51 PM
ADDED : நவ 18, 2026 05:51 PM
திருவாரூர்: தனியார் பள்ளியில், 3 வயது சிறுவனை கட்டி வைத்து தாக்கிய ஆசிரியை பாக்கியலெட்சுமி, 26, உட்பட இருவர் மீது வழக்கு பதியப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் கோபிநாத், 33, என்பவர் மகன் சர்வின், ப்ரீகேஜி படிக்கிறார். நவ., 16ம் தேதி, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன் உடலில் காயங்கள் இருந்ததால், பள்ளிக்கு சென்று கோபிநாத் புகார் செய்தார்.
பள்ளி நிர்வாகத்தினர், வகுப்பறையில் பொருத்தி இருந்த ‘சி.சி.டி.வி’ கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறுவன் குறும்பு செய்ததால், ஆத்திரமடைந்த நாகை மாவட்டம், திருக்குவளையை சேர்ந்த ஆசிரியை பாக்கியலெட்சுமி, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த குழந்தைகள் பராமரிப்பாளர் செல்வி, 55, ஆகியோர், சிறுவன் கையை கயிற்றால் கட்டி வைத்து, அடித்தது தெரியவந்தது.
புகாரில் திருத்துறைப்பூண்டி போலீசார், பாக்கியலெட்சுமி, செல்வி ஆகியோர் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
