பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி இருவர் பலி
பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி இருவர் பலி
UPDATED : டிச 05, 2024 02:32 AM
ADDED : டிச 05, 2024 02:30 AM

வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய அரசு டவுன் பஸ் மோதியதில் இருவர் பலியாயினர்.
வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து தெப்பத்துப்பட்டிக்கு நேற்று காலை 9:50 மணிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. 10 :00 மணிக்கு அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே சென்ற போது பிரேக் பிடிக்காமல் தாறமாறாக ஓடியது .
அப்போது டூவீலரில் வந்த திருச்சியை சேர்ந்த நந்தகுமார் 21, மீது மோதியதில் தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் மூளை சிதறி பலியானார். இதே போல் ரோட்டில் நடந்து சென்ற மல்லணம்பட்டியை சேர்ந்த மூக்கையா மனைவி பஞ்சவர்ணம் 61 ,மீது மோதியதில் அவரின் கால்கள் இரண்டும் உடைந்தது. பலத்த காயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
![]() |
வேலைதேடிவந்து பலியான பரிதாபம்
ஐ.டி.ஐ., படித்த நந்தகுமாருக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா. தந்தை பெயின்டர். உறவினரான புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் விபவதேவர் வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
நந்தகுமாரின் குடும்ப நிலையை கருதி அவர் அழைத்ததால் வத்தலக்குண்டிற்கு வேலைதேடி மூன்று நாட்களுக்கு முன் வந்துள்ளார். நேற்று வேலையில் சேர அழைத்திருந்தனர். அதற்காக டூவீலரில் வந்த போது தான் விபத்தில் சிக்கி இறந்ததாக நந்தகுமாரின் பெற்றோர் கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது.
பயணிகள் புகார்
அரசு டவுன் பஸ்சை ஓட்டிய டிரைவரான தர்மத்துப்பட்டியை சேர்ந்த முத்து 42, சமீபத்தில் தான் பணியில் சேர்ந்து உள்ளார். இருமுறை மட்டுமே பஸ்சை இயக்கிய அவர் தெப்பத்துப்பட்டிக்கு செல்லும் முன்பாக பஸ்சில் பிரேக் சரியாக பிடிக்கவில்லை என கூறி உள்ளார்.
பணியாளர்கள் அருகில் உள்ள அரசு பணிமனையில் பழுதை சரி செய்து விட்டு செல்ல கூறியதால் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்சை இயக்கி உள்ளார். பஸ் ஸ்டாண்டிலே பழுதை நீக்கி புறப்பட்டிருந்தால் விபத்து நேர்ந்திருக்காது என பயணிகள் கூறினர்.