பெட்ரோல் பங்கை சேதப்படுத்திய வழக்கில் மேலும் இருவர் கைது
பெட்ரோல் பங்கை சேதப்படுத்திய வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : ஜன 01, 2024 06:36 AM
மானாமதுரை: மானாமதுரை கிருங்காங்கோட்டை அருகே உள்ள பங்கில் 'ஓசி'யில் பெட்ரோல் போடுமாறு ஏற்பட்ட தகராறில் பங்க் அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை - ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. கடந்த 23ல் டூ வீலரில் வந்த இருவர் ஓசியாக பெட்ரோல் போடுமாறு கூறியதையடுத்து பங்க்கில் இருந்த ஊழியர்கள் மறுத்ததால் தகராறு செய்தனர்.
இது குறித்து போலீசில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து மானாமதுரை போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து சென்றனர்.
அன்று இரவு 11:15 மணிக்கு டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டு பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கி மேலும் அங்கிருந்த ஊழியர் மேலமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த கணபதியை தலையில் தாக்கினர்.
சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மானாமதுரை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 24ல் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் காளீஸ்வரன் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடைய முருகப்பாஞ்சான் கிராமத்தை சேர்ந்த மாணிக்கவேல் மகன் வேல்முருகன் 21, ராஜேந்திரன் மகன் சக்திபிரியன்20, ஆகியோரை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், எஸ்.ஐ., பூபதி ராஜா தேடினர்.
பூக்குளம் அருகே வாகன தணிக்கை நடந்த நிலையில் டூ வீலரில் வந்த இருவரும் போலீசாரை பார்த்தவுடன் தப்பிச் செல்ல முயன்றனர்.
அவர்களை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.