ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம்; அமெரிக்க வர்த்தக அமைச்சர் அறிவிப்பு
ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம்; அமெரிக்க வர்த்தக அமைச்சர் அறிவிப்பு
ADDED : ஆக 27, 2025 08:37 AM

வாஷிங்டன்; ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக் கூறி உள்ளார்.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது;
தற்போது நடைமுறையில் இருக்கும் ஹெச் 1 பி விசா என்பது ஒரு மோசடி. இந்த விசா மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பணியாளர்கள் அமெரிக்காவில் வேவைவாய்ப்பு பெறுகின்றனர்.
இங்குள்ளோரை (அமெரிக்கர்கள்) பணியமர்த்த வேண்டும் என்பது அமெரிக்க நிறுவனங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். தற்போதுள்ள இந்த ஹெச் 1 பி விசா நடைமுறையை மாற்ற போகிறோம். அது மோசமானது என்பதே அதற்கு காரணம்.
அதனால் தான் அதை டிரம்ப் மாற்ற போகிறார். அவர் தலைமையின் கீழ் அமெரிக்க குடியேற்றக் கொள்கை மறுவடிவமைப்பு செய்யப்படும். மேலும், க்ரீன் கார்டு முறையையும் மாற்ற போகிறோம். நாங்கள் சிறந்த நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை தொடங்க உள்ளோம்.
இதற்காக தங்க அட்டை திட்டம் ஒன்றை டிரம்ப் நிர்வாகம் தொடங்க உத்தேசித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தது 5 மில்லியன் அமெரிக்கா டாலர்களை முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு நிரந்தர வசிப்பிடம் வழங்க இந்த திட்டம் வழிவகை செய்யும். இந்த திட்டம் விரைவில் வரும். மாற வேண்டிய நேரம் இது.
இவ்வாறு ஹோவார்டு லுட்னிக் கூறினார்.

