உயிரி தகவலியல், வேளாண் தொழில்நுட்பம் புதிதாக இரு பட்டப்படிப்புகள் துவக்கம்
உயிரி தகவலியல், வேளாண் தொழில்நுட்பம் புதிதாக இரு பட்டப்படிப்புகள் துவக்கம்
ADDED : மே 10, 2025 12:45 AM
சென்னை:''உயிரி தகவலியல், வேளாண் தொழில்நுட்பம் என, இரண்டு புதிய வேளாண் பட்டப்படிப்புகள் நடப்பாண்டு துவக்கப்பட்டு உள்ளன,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையில், வேளாண் இளநிலை பட்டப்படிப்புகளில், 2025 - 26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.
இதை, தலைமை செயலகத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு வேளாண் பல்கலை உறுப்பு கல்லுாரிகள், உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலையில் வேளாண் இளநிலை பாடப்பிரிவுகளில் சேர, இணையவழி விண்ணப்ப பதிவு துவக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் http://tnaucanapply.com என்ற இணையதளத்தில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 8ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். தர வரிசை பட்டியல் ஜூன் 16ல் வெளியிடப்படும்.
வேளாண்மை, தோட்டக்கலை, பட்டு வளர்ப்பு, வனவியல், வேளாண் பொறியியல் உள்ளிட்ட 14 பட்டப்படிப்புகள் உள்ளன. நடப்பாண்டு உயிரி தகவலியல், வேளாண் தொழில்நுட்பம் என, இரண்டு புதிய பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன.
அரசு மற்றும் தனியார் ஒதுக்கீடு சேர்த்து, மொத்தமாக 6,921 இடங்கள் உள்ளன. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், 403 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்க, தமிழ்நாடு வேளாண் பல்கலை, அதன் உறுப்பு கல்லுாரிகள் மற்றும் வேளாண் அலுவலகங்களை அணுகலாம்.
வேளாண் பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்க, தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

