கோவில்பட்டியில் இருவர் வெட்டி கொலை; அரைமணி நேரத்தில் அடுத்தடுத்த கொடூரம்
கோவில்பட்டியில் இருவர் வெட்டி கொலை; அரைமணி நேரத்தில் அடுத்தடுத்த கொடூரம்
ADDED : ஜூன் 03, 2025 07:01 AM

துாத்துக்குடி : துாத்துக்குடியில் பெண் உட்பட இருவர், அடுத்தடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன், 25. இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். கடை முன் நின்று கொண்டிருந்த அவர், திடீரென மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஆத்திரமடைந்த பிரகதீஸ்வரனின் நண்பர்கள் சிலர், அரிவாளுடன் செண்பகா நகரில் உள்ள சதீஷ் மாதவன், 26, என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டின் முன் தனியாக நின்று கொண்டிருந்த சதீஷ் மாதவனின் தாய் கஸ்துாரியை அந்த கும்பல் வெட்டி கொலை செய்து தப்பியோடியது. தடுக்க முயன்ற உறவினர் செண்பகராஜ் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
போலீஸ் குவிப்பு
அரைமணி நேர இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நிகழ்ந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணையை துவங்கினர். டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், கொலை நடந்த இடங்களை பார்வையிட்டு கொலையாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகளை அமைத்தார். கொலைகள் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த சதீஷ் மாதவன், 26, செல்லத்துரை, 26, உட்பட 8 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட பிரகதீஸ்வரன், கோவில் வளாகத்தில் வைத்து மது அருந்திய சதீஷ் மாதவன், அவரது நண்பர்களை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில், சதீஷ் மாதவன் மீது கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஏப்ரல் மாதம் தன் நண்பர் திருமண நிகழ்ச்சியில் பிரகதீஸ்வரன் வைத்த டிஜிட்டல் பேனரை சதீஷ் மாதவன் கிழித்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் பிரகதீஸ்வரனையும், அவரது தந்தை ஆனந்தனையும் கொலை செய்துவிடுவதாக சதீஷ் மாதவன் மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஆனந்தன் ஏப்., 29ல் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினர். இருதரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டதை போலீசார் அலட்சியமாக கையாண்டதால், தற்போது இரட்டை கொலை நடந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரிசி கடத்தல்
மேலும், பிரகதீஸ்வரனும், சதீஷ் மாதவனும் நண்பர்களாகவே பழகியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரது கட்டுப்பாட்டில் இருவரும் இருந்துள்ளனர். அவர் சிறைக்கு சென்றதால், யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டதால், இருவரும் தனித்தனியே ஆட்களை சேர்த்துக் கொண்டு, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அரிசி கடத்தலில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாகவும் கொலைகள் நடந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. முழுமையான விசாரணைக்குப் பின், உண்மையான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.
எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் கூறுகையில், ''கோவில்பட்டி இரட்டை கொலை ஜாதி ரீதியாகவோ, ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலோ இல்லை. கொலை நடந்த 15 நிமிடத்திற்குள் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கப்பட்டது,'' என்றார்.
சொத்து தகராறு
இதற்கிடையே, துாத்துக்குடி மாவட்டத்தில், சொத்து தகராறில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த தேவசுந்தரம் மனைவி சுயம்புகனி, 63, தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, சுயம்புகனி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில், சுயம்புகனிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான தங்கப்பாண்டி, 70, என்பவருக்கும் சொத்து தகராறு இருப்பது தெரியவந்தது. சொத்து தகராறில், அவர் சுயம்புகனியை கட்டையால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்ததால் போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் வாலிபர்
தஞ்சாவூர் மாவட்டம், கூடலுாரை சேர்ந்தவர் விஜய், 25. நடுகாவேரியை சேர்ந்த அருண்குமார், 28. இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள். இருவரும் நேற்று முன்தினம் நண்பர்களுடன், நடுகாவேரி அருகே மணகரம்பையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, மது வாங்க சென்றனர். கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அருண்குமார், விஜய் இருவருக்கும், யார் முதலில் மது வாங்குவது என, தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அருண்குமார், காலி மதுபாட்டிலை உடைத்து விஜயை குத்தினார். விஜய் படுகாயமடைந்தார். அருண்குமார், அவரது நண்பர்கள் தப்பியோடினர்.
நடுகாவேரி போலீசார் காயமடைந்த விஜயை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அருண்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தென்காசி பெண்
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டியை சேர்ந்த பரமசிவன், 45, மனைவி உமா, 37, நேற்று முன்தினம் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.
இதில், பரமசிவன் வீட்டுக்கு அருகில் வசித்த மணிக்குமார், 44, ஆட்டுத் தோல் பதப்படுத்தும் தொழில் செய்து வந்ததும், பரமசிவன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கு மணிக்குமார் உதவி செய்ததும், அப்போது உமாவுடன் மணிக்குமாருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதை பரமசிவன் கண்டித்ததால், உமா ஓராண்டாக மணிக்குமாருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், தன்னிடம் பழக வலியுறுத்திய மணிக்குமார், மறுத்த உமாவை கழுத்தறுத்து கொன்றுள்ளார். கேரளாவில் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.