ரூ.2.40 கோடி 'சிட் பண்டு' மோசடி நிறுவன அதிகாரி உட்பட இருவர் கைது
ரூ.2.40 கோடி 'சிட் பண்டு' மோசடி நிறுவன அதிகாரி உட்பட இருவர் கைது
ADDED : அக் 31, 2025 01:28 AM

சென்னை:  அரும்பாக்கத்தில் சிட்பண்டு நிறுவனம் நடத்தி, 2.40 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நிறுவன இயக்குநர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 39.
இவர், 2019ம் ஆண்டு முதல் அரும்பாக்கம் பகுதியில் உள்ள 'அச்சலிஸ் சிட் பண்டு பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில், 2.17 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார். சீட்டு பணம் முதிர்வடைந்த பின்னரும், டில்லிபாபு உட்பட 70க்கும் மேற்பட்டவர்களுக்கு, 2.40 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை திரும்ப தராமல், திடீரென நிறுவனத்தை மூடி தலைமறைவாகி உள்ளனர்.
இது குறித்து, டில்லிபாபு உட்பட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கந்து வட்டி புலனாய்வு பிரிவு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சிட் பண்டு நிறுவனத்தின் இயக்குநர்களான யுவராஜ், ஆனந்தன் மற்றும் நிறுவனத்தின் கணக்கு மேலாளரான வினோத்குமார் ஆகியோர், மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில், நேற்று நிறுவன இயக்குநரான கோயம்புத்துாரைச் சேர்ந்த ஆனந்தன், 48, அரும்பாக்கத்தைச் சேர்ந்த நிறுவன கணக்கு மேலாளர் வினோத்குமார், 32, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

