ADDED : ஆக 31, 2025 07:04 AM
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூன் 30ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் சசிகுமார் 38, சீனிமாலிக் 42, இருவரும் 2வது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்து கைதானதால் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
மற்ற 5 மீனவர்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.7.25 லட்சம்) அபராதம் விதித்தார். இதனை செலுத்த தவறினால் 5 மீனவர்களும் தலா ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். ஏழு மீனவர்களும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படுவார்கள் என மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்த நிலையில் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.

