ADDED : மே 06, 2025 12:51 AM

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவர், நிரந்தர நீதிபதிகளாக நேற்று பொறுப்பேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பவானி சுப்புராயன், ஹேமலதா, நக்கீரன், சிவஞானம் ஆகிய ஐந்து நீதிபதிகள், இம்மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர். இதன் காரணமாக, நீதிபதிகளின் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், கர்நாடகா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன் கவுடர், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகிய இருவரை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இருவருக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.