லாரி மீது டூ-வீலர், லோடு வேன் மோதி விபத்து; மூன்று பேர் பலி
லாரி மீது டூ-வீலர், லோடு வேன் மோதி விபத்து; மூன்று பேர் பலி
ADDED : பிப் 13, 2025 02:31 AM

விருதுநகர்:விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி பின்னால் டூ-வீலர், லோடு வேன் அடுத்தடுத்து மோதிய விபத்தில், மூன்று பேர் பலியாகினர்.
விருதுநகர், அல்லம்பட்டி, ஆத்துமேடைச் சேர்ந்தவர் செல்வம், 36; சாத்துார் தாயில்பட்டி பட்டாசு ஆலையில் பணிபுரிகிறார். இவர், சாத்துாரிலிருந்து டூ-வீலரில் விருதுநகர் நோக்கி நான்குவழிச் சாலையில் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தார்.
எச்சரிக்கை இல்லை
அப்போது, கள்ளிக்குடி அரசப்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன், சிமென்ட் மூட்டை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி லாரியை ஓட்டி வந்தார். பூசாரிப்பட்டி விலக்கில் வந்தபோது, லாரி பழுதாகி சாலையோரம் நின்றது. லாரியின் பின்னால் தடுப்புக்காக எச்சரிக்கை சிக்னல் எதுவும் வைக்காமல், ரோட்டோரம் டிரைவர் லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது, டூ-வீலரில் வந்த செல்வம் லாரியின் பின்னால் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவ்வழியாக லோடு வேன் ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த வினோத், 36, வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு விபத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், மதுரை நோக்கி வந்த லோடு வேன் ஒன்று, லாரியின் பின்னாலும், அங்கு நின்ற வினோத் மீதும் மோதியது. இதில், வினோத், லோடு வேனில் வந்த பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த பழக்கடை வியாபாரி வேல்முருகன், 43, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
படுகாயம்
லோடு வேனை ஓட்டி வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் கார்த்திக், படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வச்சக்காரப்பட்டி போலீசார் லாரி டிரைவர் ஈஸ்வரன், லோடு வேன் டிரைவர் ரமேஷ் கார்த்திக் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

