அடுக்குமாடி குடியிருப்பாகிறது 'உதயம்' தியேட்டர் வளாகம்
அடுக்குமாடி குடியிருப்பாகிறது 'உதயம்' தியேட்டர் வளாகம்
ADDED : பிப் 15, 2024 01:34 AM

சென்னை:தென்சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக இருந்து வரும், 'உதயம்' தியேட்டர் வளாகம், விரைவில் அடுக்குமாடி குடியிருப்பாக மாற உள்ளது.
சென்னையில் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும், தியேட்டர் வளாகங்கள், அடையாள சின்னங்களாக இருந்து வந்தன. அவை மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாவும் மாறி வருகின்றன.
சென்னை அண்ணா சாலையில் மிக பிரபலமாக இருந்து வந்த சாந்தி தியேட்டர், தற்போது தனியார் அடுக்குமாடி அலுவலக வளாகமாக மாறியுள்ளது.
இதே போன்று, சென்னையின் ஒரே, 'டிரைவ் இன்' தியேட்டராக, கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த பிரார்த்தனா தியேட்டர் வளாகம் மூடப்பட்டது. இந்த வளாகம் தற்போது பிரபல, 'பாஷ்யம்' கட்டுமான நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது.
இங்கு ஆடம்பர வசதிகளுடன் சொகுசு பங்களாக்கள் கட்டப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு சர்வதேச அளவில் பிரபலமான மால் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான இறுதி அறிவிப்பு இன்னும் வரவில்லை.
இந்த வரிசையில், சென்னை அசோக் நகர், உதயம் தியேட்டர் வளாகம், கட்டுமான நிறுவனத்திடம் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1983ல், 1.31 ஏக்கர் நிலத்தில், 40,000 சதுர அடி கட்டடத்தில், உதயம், சூரியன், சந்திரன் என, மூன்று தியேட்டர்கள், ஆறு சகோதரர்களால் கூட்டாக துவக்கப்பட்டது.
அந்த சமயத்தில் ஒரே இடத்தில், மூன்று தியேட்டர்கள் என்பது பிரமிப்பாக பார்க்கப்பட்டது. தென்சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக, இந்த வளாகம் மாறியது.
குறிப்பிட்ட காலத்துக்குப் பின் இங்கு மினி உதயம் என்ற பெயரில், நான்காவது தியேட்டரும் துவங்கப்பட்டது. ஒரே இடத்தில், நான்கு தியேட்டர்கள் இருந்தாலும், தற்போதைய 'மல்டிபிளக்ஸ்' முறைக்கு இது மாறாமல் தனித்தன்மையுடன் இயங்கி வந்தது.
இந்நிலையில், உதயம் தியேட்டர் வளாகம், பிரபல கட்டுமான நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் ஆர்வமாக உள்ள அந்நிறுவனம் இங்கும் அடுக்குமாடி குடியிருப்பை கட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், உதயம் தியேட்டர் வளாகம் விரைவில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகமாக மாறிவிடும் என்று கட்டுமான துறையினர் கூறுகின்றனர்.

