முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் உதயநிதி அ.தி.மு.க., விழாவில் பழனிசாமி ஆவேசம்
முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் உதயநிதி அ.தி.மு.க., விழாவில் பழனிசாமி ஆவேசம்
ADDED : அக் 17, 2024 06:58 PM

சென்னை:அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு விழாவை ஒட்டி, நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்; தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின், பழனிசாமி அளித்த பேட்டி:
சென்னையில் குறைந்த மழை பெய்தும், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், மக்கள் பாதிக்கப்படவில்லை என, முதல்வர் கூறுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில், 'தானே, ஒக்கி, வர்தா, கஜா' என, பல புயல்கள் வீசின. ஆனால், புயல் வேகத்தில், தமிழக அரசு சார்பில் மக்களுக்கு பணியாற்றினோம். அதன் விளைவாக, மக்கள் எதிர்கொண்ட பிரச்னையை தீர்த்து வைத்தோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளை, இந்த ஆட்சியில் முழுமையாக நிறைவேற்றவில்லை. அதனாலேயே சென்னையில் வெள்ளம் ஏற்படுகிறது. பாதியில் நிற்கிற மழைநீர் வடிகால் பணிகளை, தி.மு.க., அரசு முழுமையாக செய்திருந்தால், சென்னையில் தற்போதைய சாதாரண மழைக்கும், நீர் தேங்கியிருக்காது.
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையிலான கமிட்டி அறிக்கையின்படி, செய்யப்பட்ட வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் என்ன? அதுபற்றிய முழுமையான தகவல்களுடன் வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என கோரினேன்.
ஆனால், அதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி, 'மழை நீர் எங்கேயும் நிற்காமல் இருக்கிறது. அதுதான் வெள்ளை அறிக்கை' என, முதிர்ச்சி இல்லாமல், சொல்லி இருக்கிறார்.
பல அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை, உதயநிதி மட்டுமே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதிலாக, உதயநிதி ஒருவரே வேலை செய்கிறார். அனுபவம் பெற்ற மூத்த அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல், உதயநிதியை தி.மு.க., முன்னிலைப்படுத்துகிறது. அதற்கு அப்படி என்ன அவசியம் என புரியவில்லை.
அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், எவ்வளவோ அவதாரம் எடுக்கின்றனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என, என்னிடம் ஆறு முன்னாள் அமைச்சர்கள் கூறியதாக சொல்வது தவறு.
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் நீக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டு விட்டனர். எனவே, அ.தி.மு.க., இரண்டாக கிடக்கிறது; பிளவுபட்டுள்ளது என, இனி யாரும் பேச வேண்டாம். அ.தி.மு.க.,வில் உட்பகை இல்லை. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே உட்பகை கொண்டவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.