ADDED : ஜன 18, 2024 01:19 AM

துணை முதல்வர் பதவி தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை, தந்தையும், முதல்வருமான ஸ்டாலின் மீறி விட்டார் என்ற காரணத்துக்காக அமைச்சர் உதயநிதி, 'அப்செட்' ஆகி இருப்பதாக தி.மு.க., வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை, துணை முதல்வர் ஆக்க வேண்டும் என, ஓராண்டுக்கு முன்பிருந்தே குடும்பத்தில் இருந்து குரல்கள் எழும்பின. முதல்வர் ஸ்டாலின், உரிய நேரத்தில் பொறுப்பு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.
சம்மதம்
பல மாதங்கள் கடந்த நிலையில், சமீபத்தில் உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என, குடும்பத்தில் இருந்து மீண்டும் அழுத்தம் வந்தது.
அதையடுத்து, முதல்வரும் சொன்ன வாக்கை காப்பாற்றுவதற்கான முடிவுக்கு வந்தார். தேர்ந்த ஜோதிடர்கள் வாயிலாக நாள் குறிக்கப்பட்டது.
'வரும் 24ல் உதயநிதியை துணை முதல்வராக பொறுப்பேற்க வைக்கலாம்; அதற்கு முன், அது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம்' எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதே நேரத்தில், வரும் 21ல் சேலம் இளைஞர் அணி மாநாட்டில், துணை முதல்வர் பதவியை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளில், கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகள் தயார் செய்யப்பட்டனர்.
இந்த விஷயம் முழுக்க, அமைச்சர் உதயநிதியின் முழு சம்மதத்துடனே நடந்து வந்தது.
இதன் ஒரு அங்கமாகத்தான், சில நாட்களுக்கு முன், சென்னையில் நடக்கும,'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிக்கு அழைப்பு விடுக்கும் விதமாக பிரதமர் மோடியை, உதயநிதி டில்லி சென்று சந்தித்தார்.
அப்போது, 'தி.மு.க., அரசுக்கு, நிதி விஷயத்தில் மத்திய அரசு பெரிய மனதோடு உதவ வேண்டும்' என்ற கோரிக்கையையும் வைத்தார். அது தொடர்பாகவும் இருவரும் பேசினர்.
இது உதயநிதியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நிகழ்வாகவே குடும்பத்தினராலும், கட்சியினராலும் பார்க்கப்பட்டது. இதனால், எப்படியும் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டு விடுவோம் என்ற எண்ணம் உதயநிதிக்கு ஏற்பட்டது.
ஆனால், உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க போகிறோம் என்று பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தி என, முதல்வர் ஸ்டாலின் திடீரென குண்டு போட்டார்.
இது, உதயநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் பின்னணியை விசாரித்தபோது, அரசியலை தாண்டி அரசில் முதல்வருக்கு நெருக்கமாக இருந்து பணியாற்றும் சில அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் உளவுத்துறை அறிக்கை ஆகியவை, முதல்வர் மனதை மாற்றியது தெரிய வந்து உள்ளது.
கிடப்பில்
உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்பட்டால், லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க.,வை எதிர்க்கும் ஆயுதமாக இந்த விவகாரமே முக்கிய பிரசாரமாகி விடும்; அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதே உளவுத்துறை அறிக்கையின் சாராம்சமாக இருந்தது.
லோக்சபா தேர்தல் முடிந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு எடுத்தே, உதயநிதியை துணை முதல்வராக்கும் விஷயத்தை ஸ்டாலின் கிடப்பில் போட்டார்.
ஆனால், பெரும் எதிர்பார்ப்பில் இருந்து உதயநிதி, இதனால் ஏமாற்றம் அடைந்தார். அவரது அதிருப்தி செயல்வடிவில் வெளிப்பட்டது.
வழக்கமாக பொங்கல் நாளில், கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், குடும்ப உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று, 100 ரூபாய் அன்பளிப்பு பெறுவர். இந்தாண்டும் அது நடந்தது.
தங்கம் தென்னரசு முதல், சேகர்பாபு வரை அமைச்சர்கள் பலரும் முதல்வரை சந்தித்து, பொங்கல் வாழ்த்து பெற்றனர். உதயநிதி மனைவி கிருத்திகா, முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, 100 ரூபாய் பரிசும் பெற்றார். ஆனால், அமைச்சர் உதயநிதி, அன்று முழுதும் முதல்வரை சந்திக்கவே இல்லை.
அமைச்சருக்கான தன் குறிஞ்சி இல்லத்தை விட்டு நகரவில்லை.
மறுநாள், தனியார், 'டிவி' சேனல் ஒன்று, 'இளைஞர்கள் வழிகாட்டி அமைச்சர் உதயநிதி' என்ற தலைப்பில், கலந்துரையாடல் மற்றும் பேட்டிக்காக ஏற்பாடு செய்து, அதை பதிவு செய்வதற்காக, உதயநிதி தங்கியிருந்த குறிஞ்சி இல்லத்துக்கு காலை 8:00 மணிக்கே சென்றது.
இந்த நிகழ்ச்சியை பதிவு செய்து, சேலத்தில் நடக்க இருக்கும் இளைஞர் அணி மாநாட்டுக்கு முன், நான்கு நாட்களுக்கு தினமும் அரைமணி நேரம் ஒளிபரப்ப வேண்டும் என்பது திட்டம். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசி, அதற்கு ஏற்பாடு செய்தது முதல்வர் தான்.
மாற்றி மாற்றி
ஆனால், ஒப்புக் கொண்டபடி, தொலைக்காட்சி நிகழ்ச்சி பதிவுக்கு உதயநிதி வரவில்லை.
நேரத்தை மாற்றி மாற்றிச் சொல்லி, மாலை 6:00 மணிக்கு, 'தொண்டையில் புண் இருப்பதால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது' என்று கூறி, தொலைக்காட்சி ஊழியர்களை திருப்பி அனுப்பினார்.
விளையாட்டு துறை அமைச்சராக, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இருந்த திட்டமும் ரத்தானது.
இரு நாட்களுக்குப் பின், குடும்ப உறுப்பினர்கள் வற்புறுத்தல் மற்றும் சமாதானத்துக்குப் பின், மதுரை அலங்காநல்லூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உதயநிதி சென்றார். ஆனாலும், முதல்வருடன் இதுவரை அவர் பேசவில்லை.
இதுதவிர, தன் கணவருக்கு மேலும் மேலும் பொறுப்புகளை கொடுத்து சுமையை ஏற்ற வேண்டாம் என, மாமனார் ஸ்டாலினிடம், மருமகள் கிருத்திகா வலியுறுத்தி கூறியதால் தான், துணை முதல்வர் விஷயத்தை, முதல்வர் ஸ்டாலின் தள்ளி போட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -