ஒரு ஓட்டு கூட தவற விடக்கூடாது தி.மு.க., முகவர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தல்
ஒரு ஓட்டு கூட தவற விடக்கூடாது தி.மு.க., முகவர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 25, 2025 02:19 AM
சென்னை: 'தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் வீடு, வீடாக சென்று, மக்களை சந்திக்க வேண்டும். ஒரு ஓட்டை கூட, தவற விட்டு விடக்கூடாது' என, துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.
சென்னையில் பின்னிமில் மைதானத்தில், நேற்று நடந்த சென்னை கிழக்கு மாவட்ட, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில், அவர் பேசியது:
எப்படியாவது காவிக்கு, இங்கே வழிபோட்டு கொடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., நினைக்கிறது. கருப்பு, சிவப்பு வேட்டி கட்டும், தி.மு.க.,வினர் இருக்கும் வரை, தமிழகத்தில் காவியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கக் கூட, மத்திய அரசு மறுக்கிறது.
கல்வி நிதியாக, பா.ஜ., ஆளும் உ.பி.,க்கு 6,264 கோடி; அசாமிற்கு 2,025 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. இப்படிப்பட்ட பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது.
தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதியை, 31 ஆக குறைக்க முயற்சிக்கின்றனர். இதையெல்லாம் மக்களிடம் தி.மு.க.,வினர் எடுத்து சொல்ல வேண்டும்.
'கடந்த லோக்சபா தேர்தல் முடிந்ததும், இந்த தேர்தல் மட்டுமல்ல. இனிவரும் எந்த தேர்தலிலும், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்' என்றார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. ஆனால், இப்போது கூட்டணி வைத்துள்ளார். இந்த துரோக கூட்டணியை வீழ்த்த வேண்டிய பொறுப்பு, தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. தேர்தல் வருகிறது என்பதால், ஒவ்வொரு வீட்டு கதவையும், தி.மு.க.,வினர் தட்டுவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுகிறார்.
நாங்கள் அமித் ஷா வீட்டு கதவை தட்டவில்லை. மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்களை சொல்லி தைரியமாக மக்களை சந்திக்கிறோம். பழனிசாமி கட்டுப்பாட்டில், அ.தி.மு.க., இல்லை.
பூத் கமிட்டி உறுப்பினர்கள், தங்கள் பூத்திற்கு உட்பட்ட, வீடுகளுக்கு நேரில் சென்று, மக்களின் குறைகளை கேளுங்கள். ஒரு ஓட்டை கூட தவற விடக் கூடாது. ஏனெனில் இது மிக மிக முக்கியமான தேர்தல்.
இவ்வாறு அவர் பேசினார்.

