ADDED : அக் 26, 2025 01:14 AM

மதுரை: ''நெல் கொள்முதலில் விவசாயிகளை, துணை முதல்வர் உதயநிதி கொச்சைப்படுத்துகிறார்,'' என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடியை நம்பிக்கையோடு மேற்கொள்ளலாம் என்றார். அதனாலேயே டெல்டா மாவட்டங்களில், 6.31 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
தி.மு.க., அரசுக்கு இணக்கமாக செயல்படாத தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர்கள் ஐந்து பேரை, ஜனவரி முதல் அடுத்தடுத்து இடமாற்றம் செய்தது தான், நெல் கொள்முதல் பிரச்னைக்கு மூல காரணம்.
திறந்தவெளி கிடங்குகளை திறந்து விட்டதாக அரசு சொன்னாலும், சுமை துாக்கும் தொழிலாளர்கள் இல்லை. லாரிகள் சென்று வரும் வகையில் தரமான சாலைகள் இல்லை.
டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, விவசாயிகளின் பாதிப்பு குறித்து பேசினார். மறுநாள் தஞ்சை வந்த துணை முதல்வர் உதயநிதி, ரயில் வேகன்களில் நெல் மூட்டைகள் ஏற்றுவதை பார்த்து விட்டு, 'எந்த மைய வாசலிலும் நெல் கொட்டி வைக்கவில்லை; நெல் முளைக்கவில்லை' என்றார்.
ஏற்கனவே, ஜனவரியில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளைத் தான் தீபாவளி வரையிலும் ரயில் வேகன்களில் வெளிமாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். தஞ்சை ஒரத்தநாடு பின்னையூரில் 50,000 மூட்டை அளவிற்கு மையத்தின் வெளியே நெல் கொட்டப்பட்டுள்ளது.
உண்மைக்கு மாறாக பேசிய உதயநிதி, விவசாயிகளுக்கு நம்பகத்தன்மையாக நடந்து கொள்ளவில்லை. விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்துகளை சொல்லி, உண்மையான பாதிப்பை மூடி மறைக்க நினைக்கிறார்.
டெல்டா பகுதிகளில் அக்., 15 வரை மழையில்லாததால், நெல்லை அறுவடை செய்து மையத்தின் வாசல்களில் வைத்து விட்டோம். அக்., 16க்கு பிறகு கொள்முதல் செய்ய ஆரம்பித்தபோதே மழையும் துவங்கியது.
கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என காரணம் காட்ட முடியாது. அ.தி.மு.க., ஆட்சியில் வாய்மொழியாக முன் அனுமதியும், அதன்பிறகு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியும் வாங்கப்பட்டது. இதை, தி.மு.க., அரசு செய்ய தவறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

