அரசு கண்டுகொள்ளவில்லை என்ற வீரர்களை உதயநிதி நேரில் அழைத்து வாழ்த்து
அரசு கண்டுகொள்ளவில்லை என்ற வீரர்களை உதயநிதி நேரில் அழைத்து வாழ்த்து
ADDED : ஜன 30, 2025 03:00 AM

சென்னை:மலேஷியாவில் நடந்த ஆசிய பசிபிக் காது கேளாதோர் போட்டிகளில், பதக்கங்களை வென்ற வீரர்கள், தங்களை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை எனப் புகார் கூறிய நிலையில், நேற்று அவர்களை துணைமுதல்வர் உதயநிதி நேரில் அழைத்து வாழ்த்து கூறினார்.
மலேஷியாவில் நடந்த 10வது, ஆசிய பசிபிக் காது கேளாதோர் போட்டியில், 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை வென்ற, 11 வீரர் மற்றும் வீராங்கனைகளை, தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.
சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனையரும் நேற்றுமுன்தினம் பத்திரிகையாளர்களிடம், அதை தெரிவித்தனர்.
நேற்று துணை முதல்வர் உதயநிதி, அவர்களை நேரில் அழைத்து பாராட்டினார். அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அத்துடன், பெங்களூருவில் நடந்த உலக குதிரையேற்ற போட்டியில் பங்கேற்று, ஆசியாவின் சிறந்த யூத் ரைடராக தேர்வான மிராயா தாதாபோய்; மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த 69வது ஜுனியர் தேசிய பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகள் ஆகியோரையும், துணை முதல்வர் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், 28 மாவட்டங்களில் செயல்படும், 39 விளையாட்டு விடுதி மாணவ, மாணவியருக்கு, உயர் ரக ட்ராக்சூட் மற்றும் இரண்டு டி - ஷர்ட்டுகளை வழங்குவதற்கு அடையாளமாக, எட்டு பேருக்கு உதயநிதி அவற்றை வழங்கினார்.
ஆசிய பசிபிக் காது கேளாதோர் போட்டியில் பங்கேற்க சென்ற, 11 வீரர்களுக்கும், சாம்பியன் அறக்கட்டளை சார்பில், தலா 20,000 ரூபாய் வழங்கி, வழி அனுப்பி வைக்கப்பட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

