உதயநிதி 'ராவண வம்சம்': எம்.எல்.ஏ., பேச்சால் விவாதம்
உதயநிதி 'ராவண வம்சம்': எம்.எல்.ஏ., பேச்சால் விவாதம்
ADDED : ஏப் 17, 2025 06:23 AM

சென்னை:
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., தியாகராஜன்: துணை முதல்வர் உதயநிதி, பத்து தலை ராவண வம்சம். சனாதனத்தை முறியடிக்க வந்த தலைவர்.
அ.தி.மு.க., - கே.பி.முனுசாமி: தி.மு.க., - எம்.எல்.ஏ., தியாகராஜன், கவிதை நயத்துடன் அழகாக பேசினார். துணை முதல்வர் உதயநிதியை, ராவண வம்சம் என்றும், சனாதனத்தை அழிக்க வந்தவர் என்றும் கூறினார்.
அதில், சொல் அழகு இருந்தாலும், கருத்துப் பிழை உள்ளது. ராவணன் சிவபக்தர். அவர், சனாதனத்தை அழிக்க முற்பட்டார் என்பது போல ஒப்பிட்டு பேசுவது பொருந்தாத கருத்து.
அமைச்சர் சேகர்பாபு: சனாதனமும், இறைபக்தியும் வாழைப்பழம் போன்றது. வாழைப்பழம் என்பது இறைவன். அதிலிருக்கும் தோல் தான் சனாதனம்.
கே.பி.முனுசாமி: அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து முற்றுலும் தவறானது. சனாதனத்திற்கும், இறைபக்திக்கும் வேறுபாடுகள் உள்ளன. இரண்டும் ஒன்று தான் என்பது போல அமைச்சரின் உவமை உள்ளது. இரண்டும் ஒன்று என்றால், சனாதன எதிர்ப்பு தேவையில்லை. அதற்காக நீதிமன்ற வழக்குகளும் தேவையில்லை.
வி.சி.,- சிந்தனைச் செல்வன்: சனாதனம் வேறு; இறைபக்தி வேறு. தமிழர்களின் மெய்யியல் உணர்வுக்கும், சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.