உதயநிதி நேரடி பார்வையில் மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரம் மண்டல தலைவர்களை அடுத்து 7 கவுன்சிலர்களும் சிக்குகின்றனர்
உதயநிதி நேரடி பார்வையில் மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரம் மண்டல தலைவர்களை அடுத்து 7 கவுன்சிலர்களும் சிக்குகின்றனர்
ADDED : ஜூலை 14, 2025 02:55 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு தொடர்பாக கட்சி ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, புதிய மண்டல தலைவர்களை முடிவு செய்யும் பணிகள் துணைமுதல்வர் உதயநிதி நேரடி கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது. இதற்கிடையே இவ்விவகாரத்தில் 7 கவுன்சிலர்களுக்கும் தொடர்புள்ளது என்ற தகவலால் கட்சித் தலைமை அதிர்ச்சியில் உள்ளது.
மதுரை மாநகராட்சியில் தனியார் வணிக கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைவாக நிர்ணயித்தது தொடர்பாக ரூ.பல கோடி முறைகேடு செய்த விவகாரத்தில் முன்னாள் உதவி கமிஷனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் 5 தி.மு.க., மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மாநகராட்சி வரலாற்றில் முறைகேடு புகார் தொடர்பாக மண்டல தலைவர்கள் ஒரே நேரத்தில் கூண்டோடு ராஜினாமா செய்யப்பட்டது மதுரை மாநகராட்சியில் தான்.
7 கவுன்சிலர்களுக்கும் தொடர்பு
இம்முறைகேட்டில் ஈடுபட்ட 55 பேர் பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயாரித்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது 7 தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. பல தனியார் கட்டடங்களுக்கு இந்த கவுன்சிலர்கள் பரிந்துரை செய்த ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சில கவுன்சிலர்களை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கையெழுத்திட்ட பரிந்துரை கடிதங்களை பதவியிழந்த மண்டலத் தலைவர் ஒருவர் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்தும் கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ., நெருக்கடி
இவ்விவகாரத்தில் 'தி.மு.க.,வினரை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சிலரை மட்டும் பதவி விலக வைத்துள்ளது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும். இந்த முறைகேடுக்கு மூளையாக இருந்த மேயரின் உதவியாளர் பொன்மணியின் கணவர் ரவியை கைது செய்து விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என அ.தி.மு.க., வலியுறுத்தி வருகிறது.
இதுபோல் 'ரூ.150 கோடி முறைகேட்டில் மண்டல தலைவர்களுக்கு மட்டும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை. அதன் பின்னணியில் உள்ள தி.மு.க.,வினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பா.ஜ.,வும் நெருக்கடி கொடுத்துள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க., தலைமைக்கு இதுபெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க., வினர் கூறியதாவது:
எதிர்க்கட்சி நெருக்கடிகளை அரசியல் ரீதியாக சமாளிக்க மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரத்தை தற்போது துணை முதல்வர் உதயநிதியே நேரில் கண்காணிக்கிறார். புதிய மண்டலத் தலைவர்களை நியமிப்பதில் அமைச்சர்கள் தலையீடு இருக்க கூடாது. கட்சிக்காக உழைத்தவர்களுக்குபதவி வழங்க வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதி, ஒன்றிய செயலாளர் பதவிகளில் இளைஞரணியை சேர்ந்த சில நிர்வாகிகளை உதயநிதியே நேடியாக நியமித்துள்ளார். அந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், மா.செ.,க்கள் செயல்பாடுகளை அவர் நியமித்த நிர்வாகிகளிடம் மறைமுகமாக அறிக்கை பெற்று கண்காணிக்கிறார்.
மதுரையில் உதயநிதி நியமித்த பகுதி செயலாளருக்கு உட்பட்ட எல்லையை எவ்வித அனுமதியும் பெறாமல் மாற்றியமைத்தும், புதிய செயலாளர்களை நியமித்த விவகாரமும் விஸ்ரூபமெடுத்துள்ளது. மாநகராட்சி முறைகேடு, மண்டல தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு இடையே உள்ள தொடர்பும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மதுரை மீதான அவரது நடவடிக்கை விரைவில் துவங்கும் என்றனர்.