உதயநிதியின் தீபாவளி வாழ்த்து: ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
உதயநிதியின் தீபாவளி வாழ்த்து: ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
ADDED : அக் 20, 2025 07:13 AM

திருப்பூர்: ''துணை முதல்வர் உதயநிதி, 'நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் தீபாவளி வாழ்த்துகள்' என கூறியிருப்பது, ஹிந்துக்களை அவமதிக்கும் செயல்,'' என்று ஹிந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத திராவிட மாடல் அரசு, அதிகாரத்தில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு என, எந்த ஹிந்து பண்டிகைகளுக்கும் தி.மு.க.,வினர் வாழ்த்து சொல்வதில்லை.
சென்னையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, 'நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் தீபாவளி வாழ்த்துகள்' என கூறியிருக்கிறார்.
கலாசார சீர்கேடு இது, உலகெங்கும் இருக்கக்கூடிய, ஹிந்துக்களை அவமதிக்கும் செயல். ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படுபவர்களை, ஹிந்துக்கள் அடையாளம் காண வேண்டும்.
மேற்கத்திய நாடுகளின் தாக்கத்தால், 'ஹேப்பி ஸ்ட்ரீட்' போன்ற கலாசார சீர்கேடுகள், தி.மு.க., அரசால் தமிழகத்தில் நடந்து வருகின்றன. நம் கலாசார, பண்பாடுகளை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் வளர்த்திட, ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
பண்டிகைகளின் மகத்துவத்தையும், அது எப்படி உருவானது என்பதையும் வளரும் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காடேஸ்வரா சுப்ரமணியத்தின் மற்றொரு அறிக்கை:
சட்டசபையில் ஒரே நாளில், 16 மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றியது ஜனநாயக கேலிக்கூத்து. கோவில் இடங்களில் கல்லுாரி துவங்குவதற்காக, அறநிலையத்துறை சதிசெய்து தாக்கல் செய்த மசோதாவை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்த்தார். அவரை ஹிந்து முன்னணி பாராட்டுகிறது.
கோவில் சொத்துக்கள், நிதி, கோவில் இடங்கள் ஆகியவை கோவிலுக்கு தான் பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம் பலமுறை கூறிய பிறகும், தி.மு.க., அரசு இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது, நீதிமன்ற அவமதிப்பு.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கோவில் நிதி, தங்கம் மற்றும் இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. விஞ்ஞானபூர்வ ஊழலில் கைதேர்ந்தது தி.மு.க., என நீதிபதி சர்க்காரியா தெரிவித்த கருத்து, இன்றும் பொருத்தமாக இருக்கிறது.
கண்டிக்க வேண்டும் கோவில் சொத்துக்களை அழிக்கும் திட்டங்களை, மக்கள்நலன் என்ற போர்வையில் சட்டசபையில் தி.மு.க., அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவை ஏற்கக்கூடாது என்று, ஹிந்து முன்னணியின் சட்டக்குழு, கவர்னர் ரவியை சந்தித்து மனு அளிக்கும். தி.மு.க., அரசின் இந்த சதியை, ஹிந்துக்கள் புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும். ஹிந்து ஆன்மிக அமைப்புகள், ஆதீன மடாதிபதிகள் கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.