தென் மாவட்டங்களில் உதயநிதி சுற்றுப்பயணம் 'எய்ம்ஸ் செங்கல்' பாணியில் கலகலக்க திட்டம்
தென் மாவட்டங்களில் உதயநிதி சுற்றுப்பயணம் 'எய்ம்ஸ் செங்கல்' பாணியில் கலகலக்க திட்டம்
ADDED : ஆக 29, 2025 04:00 AM

மதுரை: மதுரை த.வெ.க., மாநாடு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சுற்றுப்பயணத்தை அடுத்து, தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதியும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளார்.
இதில், தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் விஜயின் 'அங்கிள்' விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பதுடன், 'எய்ம்ஸ்' பணிகள் தாமதமாவதை குறிப்பிடும் வகையில், 2021 சட்டசபை தேர்தலில் செங்கலை காண்பித்து அரசியலில் கலகலக்க வைத்தது போல், மத்திய அரசை விமர்சிக்கும் புதிய பிரசார திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி, அனைத்து கட்சி தலைவர்களும் சுற்றுப்பயணம், மாநாடு, கூட்டங்கள் என மக்கள் மத்தியில் பிசியாக உள்ளனர். மேடைகளில் தனிமனித விமர்சனங்கள் துாள் பறக்கின்றன.
குறிப்பாக, மதுரையில் ஆக., 21ல் நடந்த த.வெ.க., மாநாட்டில் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த அக்கட்சி தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என குறிப்பிட்டு 'வாட் அங்கிள், ராங் அங்கிள்' என பேசியது தி.மு.க.,வை 'டென்ஷன்' ஆக்கியுள்ளது.
'அங்கிள்' விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தி.மு.க., 'தேர்தல் நேரத்தில், நாங்களும் நல்லா பதில் சொல்லுவோம்' என அமைச்சர் நேரு வாயிலாக, சூசக எச்சரிக்கையும் விடுத்தது.
இந்நிலையில், தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மதுரையில் முகாமிட்டு செப்., 1 முதல் அங்குள்ள தொகுதிகளில் பேசுகிறார். அப்போது, மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேடு உட்பட பல்வேறு விஷயங்களை பேச உள்ளார்.
இதற்கு போட்டியாக, தி.மு.க.,வும் உதயநிதியை வைத்து பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
உதயநிதி இதுவரை விஜய் குறித்து பேசவில்லை. ஆனால், மதுரைக்கு வரும்போது, நிச்சயம் அவர் குறித்து காட்டமான விமர்சனம் வைப்பார்.
இளைஞர்களை கவரும் வகையில், அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பயணம் அல்லது அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை என்ற திட்டத்தை அறிவிக்க உள்ளார்.
மத்திய அரசு மற்றும் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை விமர்சிக்கவும் பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 'எய்ம்ஸ் செங்கல்' போல, மக்களை எளிதில் கவரும் படி, உதயநிதியின் விமர்சனங்கள் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.