புலிகள் காப்பகத்தில் 2,000 ஏக்கர் வனம் அழிப்பு; உடுமலை விவசாயிகள் 'பகீர்' குற்றச்சாட்டு
புலிகள் காப்பகத்தில் 2,000 ஏக்கர் வனம் அழிப்பு; உடுமலை விவசாயிகள் 'பகீர்' குற்றச்சாட்டு
ADDED : மே 13, 2025 03:14 AM

'தமிழக அரசின் நில உரிமை பட்டா வழங்கும் திட்டத்தால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 2,000 ஏக்கர் வனப்பரப்பு விளைநிலமாக மாற்றப்பட்டுள்ளது' என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் 'நாம் தமிழர்' கட்சியை சேர்ந்த விவசாயிகள் பேசியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், ஆண்டுதோறும் வனப்பரப்பு குறைந்து வருவதால், வனவிலங்குகள் சமவெளிப்பகுதிக்கு வந்து அதிக சேதம் ஏற்படுத்துகின்றன.
குழிப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு, தமிழக அரசு நில உரிமை பட்டா வழங்கி வருகிறது. இரண்டு ஆண்டுகளில், 800 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ள பட்டா வழங்கியதில், 2,000 ஏக்கர் வரை வனப்பரப்பு அழிக்கப்பட்டு, விளைநிலமாக அப்பகுதி மக்களால் மாற்றப்பட்டுள்ளது.
மலைத்தொடர்களுக்கு இடையே உள்ள பகுதியில், வனம் அழிக்கப்பட்டு, விவசாயம் செய்கின்றனர். இதனால், வனவிலங்குகள் சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்ந்து, விளைநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.தொடர்ந்து, நில உரிமை பட்டா வழங்குவதால், வனப்பரப்பு சுருங்கி, வனமே முற்றிலுமாக அழியும் நிலை உருவாகும்.
வனத்துறை அதிகாரிகள், வனப்பரப்பு குறைந்துள்ளது குறித்து முறையாக ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வன உரிமை பட்டா வழங்கும் திட்டத்தை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட மலைப்பாதைகளை மீட்டு, வனமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
இதுகுறித்து, நேரடி ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
- நமது நிருபர் -