யு.ஜி.சி., வரைவு அறிக்கை: திரும்ப பெற ஆசிரியர் சங்கம் கடிதம்
யு.ஜி.சி., வரைவு அறிக்கை: திரும்ப பெற ஆசிரியர் சங்கம் கடிதம்
ADDED : பிப் 08, 2025 12:31 AM
சென்னை:பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் தலைவருக்கு, அண்ணா பல்கலை ஆசிரியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்கலைகளில் ஒப்பந்த அடிப்படையில், உதவிப் பேராசிரியர்களை ஆறு மாத காலத்திற்கு பணியமர்த்த, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் புதிய வரைவு அறிக்கை வழிவகுக்கிறது. ஏற்கனவே உள்ள விதியின்படி, 10 சதவீதம் வரை ஒப்பந்தப் பணியாளரை நியமிக்க முடியும்.
ஆனால், அண்ணா பல்கலையின் ஆசிரியர்களில், 50 சதவீதம் பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நிலையில், அவர்களை நிரந்தரமாக்காமல் ஒப்பந்தத்தை நீட்டிப்பதால், பேராசிரியர்களின் வாழ்க்கைத் தரமும், மாணவர்களின் கல்வித் தரமும் பாதிக்கப்படுகிறது.
புதிய வரைவில், எத்தனை சதவீதம் பணியாளர்களை நியமிக்கலாம் என்ற வரையறை இல்லை. இதனால், நிரந்தர பணியில்லாமல் போகும். ஏற்கனவே, பல்கலைகளுக்கான நிதியை யு.ஜி.சி., நிறுத்தி வைத்துள்ளது.
இதனால், மாநில அரசையே அனைத்துக்கும் நம்பி இருப்பதால், கல்விப்பணியின் தரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், துணைவேந்தர் தேடல் குழுவில், யு.ஜி.சி., பரிந்துரையாளரை அனுமதித்தால், தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் பறிக்கப்படும். அதனால், இந்த வரைவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.