பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்றுமதி 20 சதவீதம் வளர்ச்சி அடையும்
பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்றுமதி 20 சதவீதம் வளர்ச்சி அடையும்
ADDED : மே 07, 2025 11:26 PM

திருப்பூர்:தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதால், பிரிட்டனுக்கான நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஒரே ஆண்டில், 100 சதவீதம் அதிகரிக்கும் என்றும் திருப்பூரின் ஏற்றுமதியிலும் 20 சதவீதம் வளர்ச்சி கிடைக்கும் என்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில், இந்தியா, பல்வேறு நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கொரியா, மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த, எட்டு ஆண்டுகளாக, பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது.
அதன் பயனாக, நேற்று முன்தினம், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கு முன் 12 சதவீதம் வரை வரி செலுத்தி, இந்திய ஆடைகளை வாங்க வேண்டிய நிலை இருந்தது.
தற்போது, பரஸ்பரம் தாராள வர்த்தக ஒப்பந்தம் உருவாகியுள்ளதால், போட்டியாக உள்ள வங்கதேசத்தை காட்டிலும், குறைந்த விலையில் ஆடைகளை விற்க முடியும். ஒரே ஆண்டில் வர்த்தகம், 100 சதவீதம் உயரும் என்று ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.