பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 73.73 ஏக்கர் நிலத்தை மீட்க முடியல! போலீசார் ஒத்துழைப்பின்றி அதிகாரிகள் திணறல்
பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 73.73 ஏக்கர் நிலத்தை மீட்க முடியல! போலீசார் ஒத்துழைப்பின்றி அதிகாரிகள் திணறல்
ADDED : ஜூன் 11, 2025 08:11 PM

அரசியல் கட்சிகளின் பின்புலம், போலீசார் அனுமதி தர மறுப்பது போன்ற காரணங்களால், ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நிலங்களை அளவீடு செய்ய கூட முடியாத சூழல் நிலவுகிறது.இடத்தை மீட்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மன்னர்கள், நாயக்கர்கள் காலத்தில் கோவில்களில் அன்றாட பூஜைகள் நடைபெறுவதற்காக நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளன.
ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, அரசியல் கட்சியினர் செயல்படுவதால், நிலங்களைமீட்டெடுக்க ஹிந்துசமய அறநிலையத்துறையினர் திக்குமுக்காடுகின்றனர்.
இந்நிலையில், சின்ன நெகமத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்றாயப்பெருமாள் கோவிவிலுக்கு சொந்தமான, 29.85 ெஹக்டர் (73.73 ஏக்கர்) நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளன. இந்த நிலங்கள் பல ஆண்டுகளாக திராவிட கட்சியினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதை மீட்டெடுக்கும் வகையில், நில அளவீடு செய்ய ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு ஹிந்து அமைப்புகள், ஆன்மிகவாதிகள் வலியுறுத்தி வந்தனர்.இச்சூழலில், அறநிலையத்துறை அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்ய திட்டமிட்டு, போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளனர். முதல் முறை, இன்ஸ்பெக்டர் மாற்றம் காரணமாக பாதுகாப்பு வழங்கவில்லை.
கடந்த ஏப்., மாதம் அனுமதி கேட்ட போது, போலீஸ் தரப்பில், 'கோவில் உரிமை கொண்டாடுவதில் அறங்காவலர் தரப்புக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே இரண்டாண்டுகளாக பிரச்னை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது, இந்த நிலத்தை அளவீடு செய்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் அனுமதி மறுக்கப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக, நேற்று அளவீடு செய்ய போலீசாரிடம் அனுமதி கோரப்பட்ட சூழலில், கோவைக்கு முதல்வர் வருகையை காரணமாக கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பாளர்கள் பின்னணியில் அரசியல் கட்சியினர் இருப்பதால், அரசுத்துறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'சென்றாய பெருமாள் கோவில் நிலம் அளவீடு செய்ய போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. அவர்கள், முதல்வர் வருவதால் மற்றொரு நாள் வருவாய்துறையுடன் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கலாம், என தெரிவித்துள்ளனர்.
இதனால், இன்று (நேற்று) நடைபெற இருந்த நில அளவீடு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன,' என்றனர்.
- நமது நிருபர் -