ADDED : ஏப் 07, 2025 04:41 AM

சென்னை: 'பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஊறித் திளைத்து, அறமற்ற துறையாக தமிழக அறநிலையத்துறை மாறியுள்ளது' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலை, மக்கள் வழிபட திறக்காவிட்டால், கோவில் நுழைவு போராட்டத்தை முன்னெடுப்போம்' என அறிவித்ததும், 'ஒரு வாரத்தில் கோவில் திறக்கப்படும்' என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அத்துடன், 'கோவில் திறக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து, நாம் தமிழர் கட்சி அரசியல் செய்கிறது' என்றும் குற்றஞ்சாட்டினார்.
கோவிலை அரசு திறக்கவிருப்பது எங்களுக்கு தெரியுமானால், நாங்கள் போராட்டத்தை அறிவிக்கும் வரை, ஏன் கோவிலை திறப்பதாக அறிவிக்கவில்லை. கோவில் நிலம் எனக்கூறி, ஏழை மக்கள் குடியிருக்கும் வீடுகளை பறிக்கும் அறநிலையத்துறை, பெரும் செல்வந்தர்கள் வசமுள்ள, பல்லாயிரம் ஏக்கர் கோவில் நிலங்களை மீட்காதது ஏன்?
தமிழில் குடமுழுக்கு நடத்த போதுமான ஓதுவார்கள் இல்லை என, அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வெட்கமாக இல்லையா.
ஆந்திரா, கேரளா கோவில்களில், தமிழில் அறிவிப்பு பலகை இல்லை. திருவண்ணாமலை கோவிலில் தெலுங்கில் அறிவிப்பு பலகை வைத்திருப்பது யாரை மகிழ்விக்க. இதுதான், தி.மு.க., அரசு கடைப்பிடிக்கும் இரு மொழி கொள்கையா?
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய அரசு, கோவில் வளாகத்தில் யானை மிதித்து இறந்த பாகன்களுக்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்கவில்லை.
அன்றாட பணிகளுக்கு பொருட்கள் வாங்குவது, பிரசாதம் வழங்குவது, உண்டியல் வருமானம், பக்தர்கள் காணிக்கை, கோவில் நகைகள் என, தமிழக அறநிலையத்துறைக்கு வரும் வருமானத்தில் நடக்கும் ஊழல்கள், வார்த்தைகளில் சொல்லி மாளக்கூடியதல்ல.
தமிழகம் முழுதும் அறநிலையத்துறையில் நடக்கும் ஊழல்களை, கற்பனை செய்யவே முடியவில்லை. பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஊறித் திளைத்து, அறமற்ற துறையாக தமிழக அறநிலையத்துறை மாறியுள்ளது.
எனவே, அறநிலையத்துறை வருமானம் மற்றும் செலவுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோவில்களை அறநிலையத்துறை நிர்வகிக்கக்கூடாது என்பதல்ல எங்கள் கொள்கை.
கோவில்களை கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை மாறி விடக்கூடாது என்பதே எங்கள் கொள்கை.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.