தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கோடை விடுமுறை முடிந்து திரும்பும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை தயார்

 கோடை விடுமுறை முடிந்து திரும்பும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை தயார்

 கோடை விடுமுறை முடிந்து திரும்பும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை தயார்


ADDED : மே 22, 2026 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அவர்களுக்கு இலவச சீருடை திட்டத்தின் கீழ், இரண்டு ஜோடி சீருடை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இலவச சீருடை திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் நான்கு ஜோடி சீருடை வழங்கப்படுகிறது.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கப்படும் முதல் நாளில், அவை வழங்கப்படுவது வழக்கம்.

தமிழகத்தில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 16ம் தேதி முடிந்தன. மறுநாள், 17 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அன்றைய தினம் மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு ஜோடி சீருடை, நோட்டுப் புத்தகம், பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பொருட்கள், மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன என, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில்

சீருடை வழங்குவதில் தாமதம்

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறை கீழ் செயல்படும் 1,138 பள்ளிகளில், 60,000க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும், நான்கு ஜோடி இலவச சீருடை வழங்கப்படுகிறது. இதில், 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை வாயிலாகவும்; 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் நல தொழில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகவும் சீருடைகள் தைத்து வழங்கப்படுகின்றன. துறை செயலர், ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத் துறையில், பல்வேறு நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மாணவர்களுக்கான சீருடை தைக்கும் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்திலேயே, மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு பணிகளில் இழுபறி நிலவி வருகிறது. துறை அதிகாரிகள் கூறுகையில், 'சீருடை தைக்கும் பணிகளுக்கான ஆணைகள், இரண்டு நாட்களுக்கு முன் வழங்கப்பட்டு விட்டன; பணிகள் விரைவாக முடிக்கப்படும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us