'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வணிகம் ரூ.22 லட்சம் கோடியை தாண்டியது
'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வணிகம் ரூ.22 லட்சம் கோடியை தாண்டியது
ADDED : நவ 12, 2025 01:57 AM

சென்னை: ''வாடிக்கையாளர்களின் ஆதரவு மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பால், 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வளர்ச்சி சிறப்பாக உள்ளது; தற்போது, வங்கியின் மொத்த வணிகம், 22 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது,'' என, வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் சத்தியபான் பெஹெரா தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், பொதுத்துறையை சேர்ந்த, 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா'வின், 107வது நிறுவன தினம், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் உமா சங்கர், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சென்னை மண்டலப் பொது மேலாளர் சத்தியபான் பெஹெரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், சிறப்பாக பணிபுரிந்த வங்கி பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வங்கி பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், சத்தியபான் பெஹெரா பேசியதாவது:
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு நாடு முழுதும், 21 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது, வங்கியின் மொத்த வணிகம், 22 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
நாடு முழுதும், 75,000 பணியாளர்கள், 8,699 கிளைகள், 8,976 ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணம் எடுக்கும் மையங்கள் உள்ளன.
அனைவருக்கும் வங்கி சேவை, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களை உள்ளடக்கிய முன்னுரிமை துறைக்கு கடன் வழங்குவது என, அனைத்து திட்டங்களையும், 'யூனியன் பேங் ஆப் இந்தியா' சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் உமா சங்கர் பேசும்போது, ''யூனியன் வங்கி, இத்தனை ஆண்டுகளாக, பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. புதிய தொழில்நுட்பம், டிஜிட்டல் பரிவர்த்தனையை சிறப்பாக செயல்படுத்துகிறது,'' என்றார்.
மும்பை தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி, கலைவாணர் அரங்கில், எல்.இ.டி., திரையில் வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. இதில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாண் இயக்குநர் ஆஷிஷ் பாண்டே பேசினார்.

