யூனியன் வங்கி சார்பில் 40 பேருக்கு ரூ.75 கோடி கடனுதவி
யூனியன் வங்கி சார்பில் 40 பேருக்கு ரூ.75 கோடி கடனுதவி
ADDED : மே 01, 2025 12:51 AM

சென்னை:யூனியின் வங்கியின் சேவைகள், மக்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில், நாடு முழுதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கி சேவை விரிவாக்க திட்ட நிகழ்ச்சிகள், கடந்த 28ம் தேதி துவங்கி  நிறைவடைந்தன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை தெற்கு பிராந்தியம் சார்பில், தி.நகர் ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில், தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் வங்கிகளில் எப்படி கடன் பெறுவது போன்ற வழிகாட்டுதல்கள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 40 யூனியன் வங்கி பயனாளிகளுக்கு, 75 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. கடனுதவிக்கான காசோலையை, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு மற்றும் உதவிப் பிரிவு துணை இயக்குநர் அமிலியா பெட்ஸி வழங்கி பேசியதாவது:
சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், மத்திய எம்.எஸ்.எம்.இ., அலுவலகங்களுக்கு வந்து கடன் தருவீர்களா என்று கேட்கின்றனர்.
கடன் எந்த நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தொழில் முனைவோர்களுக்காக, பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. சில திட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், சில திட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
இதுகுறித்து தொழில் முனைவோருக்கு தெரிய வேண்டும். உத்யம் இணையதளத்தில், தொழில் முனைவோர் இலவசமாகப் பதிவு செய்யலாம். பலர் சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்கின்றனர். அங்கு மற்றவர்களின் ஆவணங்களை சமர்ப்பித்து சான்று பெற்று விடுகின்றனர்.
இதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த சந்தேகம் இருந்தாலும், msme.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் யூனியன் வங்கியின், சென்னை மண்டலப் பொது மேலாளர் சத்யபான் பெஹெரா,சென்னை தெற்கு பிராந்திய தலைவர் ஜெய ராஜு, மத்திய காலணி பயிற்சி நிறுவன இயக்குநர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

