ADDED : பிப் 02, 2026 03:27 AM

சென்னை: மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள்:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:
தொடர்ந்து ஒன்பதா-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து, புதிய சாதனை படைத்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள். உலக அளவில் போர் பதற்றத்தால், உறுதியற்ற சூழ்நி லை இருக்கும் நிலையில், 2026- - 2027ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சி, 6.8 முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது; இது, பொருளாதார நிலையில் இந்தியா வலுவாக இருப்பதைக் காட்டுகிறது.
ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும். சரக்கு வேக வழித்தடப் பாதைகள், வேக ரயில் பாதைகள், நீர் வழிப் பாதைகள் மேம்பாடு போன்றவை, போக்குவரத்து துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மத்திய அமைச்சர் முருகன்:
மத்திய அரசின் பட்ஜெட்டில், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் ஜவுளித் துறைக்கு, பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒருங்கிணைந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய ஜவுளி உற்பத்தி தொகுப்புகளை நவீனமயமாக்குவதற்கான விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்; தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, ஜவுளித் திறன் மேம்பாட்டு சூழல் அமைப்பை நவீனமயமாக்க, 'சமர்த் 2.0' திட்டம் என, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள், நம் நெசவாளர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு பயனளிக்கும்; தமிழக ஜவுளித் துறைக்கு ஊக்கம் அளிக்கும்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:
தொல்லியல் தலமான ஆதிச்சநல்லுாரில், கலாசார பாரம்பரிய மையம் அமைக்கப்படும் என, மத்திய அரசின் பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் சமுதாயத்தின் பழம் பெருமையை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வரும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழக மக்கள் சார்பில் பாராட்டுகள்.
பா.ம.க., தலைவர் அன்புமணி:
மத்திய அரசின் பட்ஜெட்டில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் வேலை வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும் வகையில், நடப்பாண்டில் மூலதன செலவுகளுக்கான ஒதுக்கீடு 10 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்:
நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. நிலையான பொருளாதார வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு மற்றும் இளைஞர்கள் ஆகிய மூன்று முக்கிய கடமைகளை உள்ளடக்கிய பட்ஜெட்டாக அமைந்திருப்பதால் பயனளிக்கும்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்:
ஆதிச்சநல்லுார் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுவதோடு, கலாசார மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழர்களின் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
