தமிழகம் 'எலக்ட்ரானிக்ஸ் ஹப்' ஆக உருவெடுக்கும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
தமிழகம் 'எலக்ட்ரானிக்ஸ் ஹப்' ஆக உருவெடுக்கும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
ADDED : ஜூன் 11, 2025 01:48 AM

சென்னை:''தமிழகத்தில் அதிக அளவில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறுவப்படும்,'' என, மத்திய ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன், தமிழ் வழியில் தனித்து இயங்கக்கூடிய, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதன் துவக்க விழா, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தமிழ் ஏ.ஐ., தளம் உருவாக்கும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது:
உலகில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகச் சிறந்ததாகவும், மிகவும் உயரிய தொழில்நுட்பமாகவும் வளர்ந்து வருகிறது. இதில் தமிழ் ஏ.ஐ., என்பது, உலகின் மூத்த மொழியான தமிழ் வாயிலாக, இந்தியாவிலேயே கட்டமைக்கப்படும், செயற்கை நுண்ணறிவு தளம்.
இது, நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு மிக முக்கிய பங்காற்றும். தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில், 'எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன், லேப்டாப், சர்வர்' உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழகம், விரைவில் நாட்டின், 'எலக்ட்ரானிக்ஸ் ஹப்' எனப்படும் மையம் என்ற நிலையை அடையும்.
ஏற்கனவே, தமிழகம் பல்வேறு தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குகிறது. அந்த வகையில், மிகத்திறன் வாய்ந்த ரயில்கள், சென்னை தயாரிப்பு கூடத்தில் உருவாகின்றன. அதேபோல், நாட்டில் மிகவும் புகழ்பெற்றதாக உள்ள 'வந்தே பாரத்' ரயில்களில் பெரும்பாலானவை, சென்னையில் தான் தயாரிக்கப்படுகின்றன அதேபோல், ஏ.ஐ., தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்சாலைகளும் தமிழகத்தில் அமையும். இந்த தமிழ் ஏ.ஐ., தளம் ரயில்வே துறையில் பயன்படுத்தி கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மலேஷிய துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பேசியதாவது:
தமிழகத்தில் உயர்கல்வியில், தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதும், தமிழகத்தில் தமிழ் மொழியை படிக்காமலேயே, 50 சதவீதம் பேர் உயர்கல்விக்கு செல்வதையும் அறிந்து, மிகவும் மனவேதனை அடைந்தேன். நாங்கள் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து, பல இன்னல்களை அனுபவித்து, தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், பிடிவாதமாக தமிழ் கற்றும், கற்பித்தும் வருகிறோம்.
எங்களின் தாயகமான தமிழகத்தில், தமிழ் கேட்கவும் படிக்கவும் ஆசைப்படுகிறோம். ஆனால், தமிழகத்தின் நிலை வேறாக இருக்கிறது. நாங்கள் மலாய், ஆங்கிலம், தமிழ் மொழிகளைப் படித்தாலும், எந்த மொழியுடனும் வேற்று மொழியை கலப்பதில்லை.
தமிழகத்தில் ஆங்கிலம் கலந்து, தமிழ் பேசுவது வழக்கமாகி விட்டது; அது மாற வேண்டும். இந்த ஏ.ஐ., தளம் வாயிலாக, உலகத் தமிழர்களுக்கு இலக்கண, இலக்கியங்கள் கற்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
லண்டனில் உள்ள செல்ம்ஸ்போர்ட் நகரசபை கவுன்சிலர் பாப்பா வெற்றி பேசியதாவது:
தமிழர்கள் பல நாடுகளில் குடியேறி, படித்து முன்னேறி வருகிறோம். இந்திய வம்சாவளியினர் என்ற முறையில், அங்கு பல அரசியல் பொறுப்புகளையும் வகிக்கிறோம்.
தமிழர்கள் என்பதற்கு அறம் சார்ந்த வாழ்வியலை வாழ்பவர் என்ற புரிதலை, வெளிநாட்டினருக்கு ஏற்படுத்தி உள்ளோம். இந்தியர்கள் என்பவர்கள், உலக மக்களை, ஒரு குடும்பமாக நினைப்பவர்கள் என்பதை, பிரதமர் மோடி, கொரோனா காலத்தில், அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கி, அதன் வாயிலாக உணர்த்தினார்.
தேசத்தந்தையாக காந்தி உள்ளதுபோல், உலக தந்தையாக மோடி உருவாகிறார். தமிழ், நாடு கடந்து பரவ, இந்த ஏ.ஐ., தொழில்நுட்பம் மிக முக்கிய பங்காற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் ஏ.ஐ., நிறுவனர் அஸ்வத்தாமன் பேசுகையில், ''தமிழகத்திலேயே இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும், தமிழ் ஏ.ஐ., தளம், தமிழ் இலக்கண, இலக்கியங்களையும், கல்வெட்டு, ஓலைச்சுவடிகளையும் கற்பிக்கும். அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளுக்கான கலைச்சொற்களையும் உருவாக்கி, உலகத்தமிழர்களுக்கு உதவும்,'' என்றார்.