குப்பையை மறுசுழற்சி செய்து சாலை போட ஊக்குவிக்கப்படும்; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
குப்பையை மறுசுழற்சி செய்து சாலை போட ஊக்குவிக்கப்படும்; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
ADDED : அக் 14, 2025 03:30 AM

புதுச்சேரி : ''எதிர்காலத்தில் வாகனங்கள் ஹைட்ரஜன் அடிப்படையில் இயங்கும் இன்ஜினை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்,'' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னல் வரையில், 3.88 கி.மீ., நீளத்திற்கு, 436 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அடிக்கல் நாட்டி பேசியதாவது:
நாட்டில் குப்பையால் பெரும் பிரச்னை. நாடு முழுதும் உள்ள நகராட்சிகளில் உருவாகும் குப்பையை மறுசுழற்சி செய்து சாலை போட பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், டில்லியில் ஏற்கனவே குப்பையை பயன்படுத்தி சாலைகள் போட்டிருக்கிறோம். குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகங்களை பிரித்தெடுத்து சாலைகள் அமைக்கப்படும். மேலும், சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கழிவுகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
சாலைகள் போடுவதற்காக, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மணல் எடுப்பதால் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படுகிறது. இது குடிநீர் பிரச்னையை தீர்க்கிறது. மத்திய நீர்வளத்துறை அமைச்சராக நான் இருந்த போது, நம் நாட்டில் ஒரு மாநிலத்துக்கும், மற்ற மாநிலத்துக்கும் இடையே, 24 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
கலந்தாய்வு கூட்டம் நடத்தி 17 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டது. தமிழகம், கர்நாடகத்திற்கு இடையிலான நீர் பிரச்னை என்பது, நீர் பற்றாக்குறை என்பதாக இல்லை. இந்த இரு மாநிலத்திற்கும் உள்ள நீர் பிரச்னையை தீர்க்க அரசியல் ரீதியாக உறுதியான முடிவு எடுக்கும் நிலை தான் வேண்டும்.
நாட்டில் தற்போது, 30 சதவீதம் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. எதிர்காலம் என்பது ஹைட்ரஜன் அடிப்படையில் இயங்கும் இன்ஜினை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.
டிராக்டர் உற்பத்தியாளர்கள் நெகிழ்வான எரிபொருள், எத்தனால், சி.என்.ஜி., மற்றும் மின்சார இயந்திரங்களை அறிமுகப்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். மின்சார டிராக்டர்கள், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்க உதவும்.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே தற்போது அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணியில், 10 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் சென்னை நகரத்துக்கு நல்லது.
மேலும், சென்னை- -பெங்களூரு விரைவு சாலையால், இரண்டு மணி நேரத்தில் பெங்களூரை அடைய முடியும். இதைத்தவிர, 600 கோடி ரூபாய் மதிப்பிலான மதுரவாயல் - -ஸ்ரீபெரும்புதுார் இடையேயான ஆறு வழிச்சாலைக்கு ஜனவரி, 2026ல் ஒப்புதல் அளிக்கப்படும். இதன் மூலம் சென்னை துறைமுகத்திற்கு இணைப்பு கிடைக்கும்.
இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.