ADDED : நவ 05, 2025 01:12 AM
திருப்பூர்: 'மத்திய அரசின் மானியம் மற்றும் உதவி தொகை உள்ளிட்ட திட்டங்கள், குறு, சிறு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க, ஒவ்வொரு விவசாயியும் தனித்துவ அடையாள எண் பெற வேண்டும்' என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில், பி.எம், கிசான் திட்டம், கடந்த, 2019ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக தான், சொந்தமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
அதேபோல், விவசாய இடுபொருள், உபகரணம் உள்ளிட்ட வேளாண் பணிகளுக்கு, மானியமாக கணிசமான தொகையை மத்திய அரசுஒதுக்குகிறது.
மாத உதவித்தொகை உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சரியான முறையில் சென்று சேர்வதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது. இருப்பினும், மாநிலத்தில் இப்பணி முழுமை பெறவில்லை. இந்த திட்டத்தில், 15 முதல், 20 சதவீத விவசாயிகள் இணையவில்லை.
'அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள உள்ள நிலையில், அரசின் திட்டங்கள் அனைத்தையும் அடுத்த மாத (டிச.,) இறுதிக்குள் முடித்துவிட வேண்டும்' என, மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு வேளை, பி.எம். கிசான் திட்டத்தில் இணைக்கப்படாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மறுக்கப்பட்டால், அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என, தமிழக அரசு கருதுகிறது. எனவே, பி.எம், கிசான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி, ஆறு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் துவங்கியுள்ளது. புதிய சிக்கல்
விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிக்கு, தமிழக அரசின் சார்பில் 'தமிழ் நிலம்' என்ற பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் வாயிலாக தான், வேளாண், தோட்டக்கலைத்துறையினர், விவசாயிகளின் விவரங்கள், பட்டா, சிட்டா விவரம் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்கின்றனர்.
ஆனால், ஓராண்டுக்கு முன் நிலம் வாங்கிய அல்லது பெயர் மாற்றம் செய்து கொண்ட விவசாயிகளின் பெயர் சிட்டாவில் இடம் பெற்றிருந்தாலும், 'தமிழ் நிலம்' செயலியில் அந்த விவரங்களை பார்க்க முடிவதில்லை; பதிவேற்றம் செய்ய முடிவதில்லை என கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் துறையினர் கூறுகின்றனர்.

