ADDED : டிச 06, 2025 09:10 AM

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, நாம் தமிழர் கட்சி சார்பில், இதுவரை 100 வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
பெரும்பாலான கட்சிகள் கூட்டணி பேச்சில் ஈடுபட்டுள்ளன. இதுவரை நடந்த தேர்தல்களில், தனித்து போட்டியிட்டு, எட்டு சதவீத ஓட்டுகளை பெற்ற, நா.த.க., வரும் தேர்தலிலும், தனித்தே போட்டியிடும் என, சீமான் அறிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட வாரியாக, மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து, பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். இக்கூட்டங்களில், கட்சி வேட்பாளர்களை, சீமான் அறிமுகப்படுத்தி வருகிறார்.
இடும்பாவனம் கார்த்திக், வேதாரண்யம் தொகுதியிலும், இயக்குநர் களஞ்சியம், ஆயிரம் விளக்கு தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுவர் என அறிவித்துள்ளார். இதுவரை 100 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நா.த.க.,வினர் கூறியதாவது:
நா.த.க., தனித்து போட்டியிட உள்ளது. எப்போதும்போல், 117 ஆண்கள், 117 பெண்கள் போட்டியிட உள்ளனர்.
இதில், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. வேட்பாளர் பட்டியல், 2026 பிப்., 21ம் தேதி திருச்சியில் நடக்கும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில் அறிவிக்கப்படும்.
இந்த மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, ஒரே மேடையில் சீமான் அறிவிப்பார். இதுவரை 100 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முழு விபரம் மாநாட்டில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

