ஜெயலலிதா நினைவிடத்திற்கு 'பவுன்சர்'கள் சூழ வந்த பெண்
ஜெயலலிதா நினைவிடத்திற்கு 'பவுன்சர்'கள் சூழ வந்த பெண்
ADDED : டிச 06, 2025 09:10 AM

சென்னை: 'நான் ஜெயலலிதாவின் மகள்' என கூறி வரும், பெங்களூருவை சேர்ந்த ஜெயலட்சுமி, ஜெயலலிதா நினைவிடத்திற்கு, பவுன்சர்களுடன் நேற்று வந்து, மக்களுக்கு பணம் வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவரது மகள் என கூறி, சிலர் தங்களை பொதுவெளியில் அறிமுகம் செய்து கொண்டனர். அதில், ஜெயலட்சுமியும் ஒருவர்.
இவர் ஜெயலலிதாவை போல் உடை அணிந்து, ஜடை பின்னி தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு, அவ்வப்போது அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, டில்லி சென்றார். பின், 'எம்.ஜி.ஆர்., - அம்மா திராவிட முன்னேற்றம் கழகம்' என்ற கட்சியை துவக்கி இருப்பதாகவும், அதை தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு, ஜெயலட்சுமி வருகை தந்தார்.
ஜெயலலிதாவை போலவே தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, தன்னுடன் 10 பவுன்சர்களையும் அவர் அழைத்து வந்தார். காரில் இருந்து பவுன்சர்கள் பாதுகாப்புடன் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்தவர்களுக்கு தலா 100 ரூபாய் வழங்கினார்.

