இனிக்காத மாம்பழம் விற்பனை; ஆசையுடன் வாங்குவோர் ஏமாற்றம்
இனிக்காத மாம்பழம் விற்பனை; ஆசையுடன் வாங்குவோர் ஏமாற்றம்
ADDED : ஏப் 21, 2025 05:45 AM

சென்னை : மாம்பழ சீசன் முன்கூட்டியே துவங்கிய நிலையில், விற்பனைக்கு வரும் மாம்பழங்களில், சுவை குறைவாக உள்ளதால், ஆசையுடன் வாங்கியவர்கள் ஏமாற்றமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், திருவள்ளூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், மாம்பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
ஏற்றுமதி
கோடை காலமான ஜூன், ஜூலை மாதங்களில், மாம்பழ வரத்து அதிகமாக இருக்கும். இங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, அல்போன்சா, இமாம்பசந்த் மாம்பழங்கள், தற்போது விற்பனைக்கு வரத்துவங்கி உள்ளன. தமிழகத்தின் பல மாவட்டங்களில், பங்கனபள்ளி, ஜவாரி, நீலம், செந்துாரா மாம்பழங்களின் விற்பனை துவங்கி உள்ளது.
ஆனால், கடைகளில் விற்பனைக்கு வரும் மாம்பழங்களின் வெளிப்புற நிறம் மட்டுமே, மஞ்சளாக உள்ளது. உள்ளே வெள்ளை சதை பற்றுடன் இனிப்பு சுவை மிகக்குறைவாக உள்ளது. விலையும் கூடுதலாக உள்ளது. கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாம்பழங்களை ஆசையோடு வாங்கி ருசிக்கும் நுகர்வோர், சுவை இல்லாததால் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
சமீப காலமாக, எத்திபான், கால்சியம் கார்பைடு ஆகியவற்றை பயன்படுத்தி, சில வியாபாரிகள் காய்களை கனிய வைத்து விற்பனை செய்கின்றனர். இதுவே சுவை குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு
இதுபோல, ஒரு சிலர் செய்யும் தவறால், மாம்பழம் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசையே, மக்களுக்கு இல்லாமல் போய்விடும். இதனால், வியாபாரிகள் மட்டுமின்றி, விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே, மாங்காய்களை இயற்கையாக பழுக்க வைத்து, மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இதை, அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பது நுகர்வோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.