UPDATED : ஏப் 09, 2024 10:23 AM
ADDED : ஏப் 08, 2024 11:38 PM

சென்னை : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி முடிந்தாலும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4 வரை, தமிழகத்தில் பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என, தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதனால், 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்வோர், பறக்கும் படையின் கிடுக்கிப்பிடியில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான மார்ச் 16 முதல், தேர்தல் நன்னடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தனிநபர்கள், 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடும் பாதிப்பு
பணப் பட்டுவாடாவை தடுக்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தலா மூன்று பறக்கும் படைகளும், மூன்று நிலை கண்காணிப்பு குழுக்களும், ஒரு வீடியோ குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கமிஷன் கெடுபிடி காரணமாக, வியாபாரிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர், நகை வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்; சிறு தொழில்கள் முடங்கிஉள்ளன.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
அதன்பின் கெடுபிடி இருக்காது என மக்கள் எதிர்பார்த்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை கட்டுப்பாடுகள் தொடரும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது:
அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் ஒரு வீடியோ குழு அமைக்கப்பட்டுஉள்ளன.
இக்குழுவினர், வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனையில் மெத்தனமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்தாலும், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தேர்தல் கட்டுப்பாடுகள் தொடரும். ஓட்டுப்பதிவு முடிந்த பின், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தலா ஒன்றாக குறைக்கப்படும்.
தனி நபர், 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்ல தடை தொடரும்.
ஓட்டுப்பதிவு 100 சதவீதம் என்பதே இலக்கு. ஓட்டுப்பதிவு குறைவாக உள்ள நகரங்களில், ஓட்டுப்பதிவை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சாமியானா பந்தல்
குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி இல்லாத ஓட்டுச்சாவடிகளில், தற்காலிகமாக அவற்றை ஏற்படுத்தவும், நிழலுக்கு சாமியானா பந்தல் அமைக்கவும், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த துணை ராணுவ வீரர், நாமக்கல்லில் ஒரு தேர்தல் பணி அலுவலர், சாலை விபத்தில் இறந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு, தலா 15 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும். இவ்வாறு சத்யபிரதா சாஹு கூறினார்.

