பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கவர்னர் ரவிக்கு அழைப்பு முதல்வரை சந்திக்க உ.பி., அமைச்சர்கள் முடிவு
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கவர்னர் ரவிக்கு அழைப்பு முதல்வரை சந்திக்க உ.பி., அமைச்சர்கள் முடிவு
ADDED : டிச 14, 2024 01:05 AM

சென்னை:'பிரயாக்ராஜ் மகா கும்ப மேளாவில், தமிழகத்திலிருந்து அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும்' என, உத்தர பிரதேச அமைச்சர்கள் ரத்தோர், அசீம் அருண் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னையில் அவர்கள் அளித்த பேட்டி:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், ஆண்டுதோறும், கும்பமேளா நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மகா கும்பமேளாவாக நடத்தப்படுகிறது.
அதன்படி, 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை, 45 நாட்கள் மகா கும்பமேளா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, உத்தர பிரதேச அரசும், மத்திய அரசும் செய்துள்ளன. 'துாய்மை, பசுமை, பாதுகாப்பு, டிஜிட்டல்' ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த, 2019ல் நடந்த கும்பமேளாவில், 25 கோடி பேர் பங்கேற்றனர். இந்த மகா கும்பமேளாவில், 45 கோடி பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம்.
மற்ற நாடுகள், மாநிலங்களில் இருந்து மகா கும்பமேளாவுக்கு வருபவர்களுக்கு வசதியாக, அதிக விமானங்கள் வந்து செல்லும் வகையில், பிரயாக்ராஜ் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும், 13,000 முறை ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன; 7,000 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும், மாற்றுப்பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் நகரில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மகா கும்பமேளா முடிந்தபின், இவற்றை பராமரிக்கும் பொறுப்பை, உ.பி., அரசு ஏற்றுள்ளது. 4,575 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம், 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகா கும்பமேளா ஏற்பாடுகள் அனைத்தும், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டு உள்ளன. அனைத்து நிகழ்வுகளும், 'ட்ரோன் கேமரா' வாயிலாக கண்காணிக்கப்படும்.
தினமும் எவ்வளவு பேர் பங்கேற்கின்றனர் என்பது, செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக கணக்கிடப்படும். மகா கும்பமேளாவில் பங்கேற்க, தமிழக கவர்னர் ரவிக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளோம்.
முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். தமிழகத்திலிருந்து அதிகமானோர் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.