ADDED : ஜன 11, 2024 12:24 AM

சென்னை: அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வினியோகத்தை, முதல்வர் ஸ்டாலின், சென்னை, ஆழ்வார்பேட்டை டி.யு.சி.எஸ்., ரேஷன் கடையில், நேற்று காலை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கர பாணி, சுப்ரமணியன், சேகர்பாபு மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள ரேஷன் கடைகளில், பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய கருவி யில், கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு கடைக்கு தலா, 150 முதல், 200 பேருக்கு பரிசு தொகுப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டி:
பரிசு தொகுப்பு வாங்க, 'டோக்கன்' கிடைக்காதவர்கள், அதை பற்றி கவலைபட தேவையில்லை. டோக்கன் பெறாதவர்கள், ரேஷன் கார்டுடன் வந்து, வரும், 14ம் தேதி வரை பரிசு தொகுப்பை வாங்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று ஒரே நாளில், 56.40 லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
புகார் எண்கள்: ஏதேனும் குளறுபடி செய்தால், ரேஷன் கார்டுதாரர்கள், 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
பரிசு தொகுப்பு முழுதும் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, மூன்று - நான்கு மாவட்டங்களுக்கு தலா ஒருவரை கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
- முதல்வர் ஸ்டாலின்.

