அரசு முடிவுக்காக காத்திருக்கும் உப்பூர் அனல் மின் திட்டம்
அரசு முடிவுக்காக காத்திருக்கும் உப்பூர் அனல் மின் திட்டம்
ADDED : செப் 22, 2024 02:44 AM
சென்னை:ராமநாதபுரத்தில் உப்பூர், திருவள்ளூரில் எண்ணுார் விரிவாக்கம் ஆகிய அனல் மின் நிலையங்களின் கட்டுமான பணிகளை, பொது - தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு, தமிழக அரசின் ஒப்புதல் கிடைக்காததால், இன்னும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளன.
ராமநாதபுரம் உப்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணியை மின் வாரியம், 2016ல் துவக்கியது. திட்டச்செலவு 12,778 கோடி ரூபாய்.
இத்திட்டத்தை எதிர்த்து, பசுமை தீர்ப்பாயத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த தீர்ப்பாயம், 2021 மார்ச்சில் பணிகளை தொடர தடை விதித்தது. இதனால், 35 சதவீத பணிகளுடன் கட்டுமானம் முடங்கியது.
அந்தாண்டு ஜூலையில், பசுமை தீர்ப்பாயம் விதித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் கட்டுமான பணி துவங்கவில்லை.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணுாரில், 660 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான பணி ஆணை, 2014 பிப்ரவரியில், 'லேன்கோ' நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.
அந்நிறுவனம், 2018ல் நிதி நெருக்கடியில் சிக்கியதால், 18 சதவீத பணிகளுடன் கட்டுமான பணி முடங்கியது.
மீதி பணிகளை மேற்கொள்ளும் ஆணை, பி.ஜி.ஆர்., நிறுவனத்திடம், 2022 மார்ச்சில் வழங்கப்பட்டது. திட்டச்செலவு 4,442 கோடி ரூபாய். அந்நிறுவனம் பணிகளை துவக்க தாமதம் செய்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
பல மாதங்களாக முடங்கியுள்ள உப்பூர் மற்றும் எண்ணுார் விரிவாக்க மின் திட்டங்களை தற்போது, 'பி.பி.பி' எனப்படும் பொது - தனியார் கூட்டு முறையில் செயல்படுத்த, மின் வாரியம் ஜூனில் முடிவு செய்தது.
இதுதொடர்பாக, தமிழக அரசிடம் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அரசு எந்த முடிவும் தெரிவிக்காமல் இருப்பதால், கட்டுமான பணிகளை துவக்குவது தாமதமாகி வருகிறது. உப்பூர் மின் நிலையத்திற்கு இதுவரை 5,847 கோடி ரூபாயும்; எண்ணுார் விரிவாக்க மின் நிலையத்திற்கு, 712 கோடி ரூபாயும் செலவிடப்பட்டு உள்ளது.