காங்கிரசுக்கு துாண்டில் போட்ட வைகைச்செல்வன் அ.தி.மு.க.,வில் சலசலப்பு
காங்கிரசுக்கு துாண்டில் போட்ட வைகைச்செல்வன் அ.தி.மு.க.,வில் சலசலப்பு
ADDED : மார் 02, 2024 12:47 AM
மதுரை:'தி.மு.க., - காங்., கூட்டணி கசப்புக்கு அ.தி.மு.க., தான் மருந்து' என அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் வைகைச்செல்வன் பேசியது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 'இண்டியா' கூட்டணியை உருவாக்கி பா.ஜ.,வுக்கு எதிராக போட்டியிட தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச 'பழைய' நிர்வாகிகள் தேவையில்லை என கருதி, மாற்றுக்கட்சியில் இருந்து வந்து காங்கிரஸ்காரராக அவதாரம் எடுத்த, சட்டசபை கட்சி தலைவரான செல்வப்பெருந்தகையை தலைமை நியமித்தது.
ஏற்கனவே தி.மு.க., வுடன் காங்., தலைவராக இருந்த அழகிரி பெயரளவில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்னும் காங்கிரசுடன் தி.மு.க., அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
அதிருப்தி
இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, 'தி.மு.க., எங்களது தோழமை கட்சி. நாங்கள் 'சீட்'டுக்காக எப்போதும் யாரிடமும் கெஞ்சியது கிடையாது. 2014ல் தி.மு.க., கூட்டணியில் இருந்தபோதும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தனித்து நின்றோம். அப்போதுகூட நாங்கள் கெஞ்சவில்லை' என 'கெத்தாக' கூறினார்.
ஒன்பது 'சீட்' கேட்டு கிடைக்காத பட்சத்தில் கூட்டணி மாறுவோம். அல்லது தனித்து போட்டியிடுவோம் என்ற ரீதியில் கருத்துதெரிவித்தார்.
இதற்காகவே காத்திருந்தது போல் அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் வைகைச்செல்வன், 'காங்கிரசுக்கு ஏற்பட்ட கசப்பிற்கு மருந்தாக நாங்கள் இருக்கிறோம்' என கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது அ.தி.மு.க.,வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிரானது
பா.ஜ.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'இனி எந்த காலத்திலும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது' என திட்டவட்டமாக கூறினார். அவரது முடிவுக்கு எதிராக, வைகைச்செல்வன் பேசலாமா என கட்சியில் சலசலப்பு எழுந்துஉள்ளது.
இதுகுறித்து வைகைச்செல்வனிடம் கேட்டபோது, ''எதிரியை வீழ்த்த பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பானதுதான். போகப்போகத் தான் இதுகுறித்து முடிவு செய்யப்படும். இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
''பா.ஜ., மதச்சார்புள்ள கட்சி. அதற்கு மாற்றாக மதச்சார்பற்ற கட்சியுடன் கூட்டணி வைப்பது நல்லதுதானே என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்தேன். இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை'' என்றார்.

