ADDED : ஜன 17, 2025 11:48 PM
சென்னை:தமிழகத்தில், அனைத்து நிலங்களுக்கும் முறையாக அளவை செய்யப்பட்டு, 'சர்வே' எண் ஒதுக்கப்படுகிறது. இதில், ஊரக பகுதிகளில் அனைத்து நிலங்களும், விவசாய அடிப்படையிலேயே வகைப்படுத்தப்பட்டு, சர்வே எண்கள் ஒதுக்கப்படுகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சிகள் வந்த பின், நிலங்களை விவசாய அடிப்படையில் வகைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள நிலங்களில், நகர்ப்புற நில அளவை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு நகர்ப்புற நில அளவை மேற்கொள்ளப்பட்ட இடங்களில், நிலங்களின் வகைப்பாடு மாற்றப்பட்டு, 'டவுன் சர்வே' எண்கள் புதிதாக ஒதுக்கப்படுகின்றன. பழைய சர்வே எண் அடிப்படையில் புதிய எண் விபரங்களை, மாவட்ட வாரியாக வருவாய் துறை வெளியிட்டு வருகிறது.
இதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற பழைய மாநகராட்சிகளிலும், குறிப்பிட்ட சில நகராட்சிகளிலும் நில அளவை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த, 10 ஆண்டுகளில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் வந்துள்ள நிலையில், அவற்றில் உள்ள நிலங்களுக்கு டவுன் சர்வே மேற்கொள்ளப்படாமல் உள்ளன.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி, எட்டு மாநகராட்சிகள், 62 நகராட்சிகளில் நகர்ப்புற நில அளவை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தொடர் நடவடிக்கையாக, 10 மாநகராட்சிகள், 22 நகராட்சிகளுக்கு உட்பட்ட, 61 கிராமங்களில், நகர்ப்புற நில அளவை பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளன. இப்பணிகள் முடிந்தவுடன் எஞ்சிய நகர்ப்புற உள்ளாட்சிகளில், டவுன் சர்வே பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், நகர்ப்புற பகுதிகளில் நிலம் வாங்கியவர்கள், கட்டுமான திட்ட அனுமதி, வங்கிக்கடன் போன்ற பணிகளை முடிப்பதில் பிரச்னைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

