புதிய நகராட்சி, மாநகராட்சிகளில் விரைவில் நகர நில அளவை பணி
புதிய நகராட்சி, மாநகராட்சிகளில் விரைவில் நகர நில அளவை பணி
ADDED : செப் 16, 2025 03:23 AM

சென்னை: புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சிகளில், நகர நில அளவை பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலமும் முறையாக நில அளவை செய்யப்பட்டு, அதற்கான வரைபடங்களுடன் உள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள், பொது மக்கள் பார்வைக்கு முழுமையாக வராவிட்டாலும், அரசிடம் தயார் நிலையில் உள்ளன. ஊரக பகுதிகளில் உள்ள நிலங்கள், பெரும்பாலும் விவசாய நிலங்களாக இருக்கும், இந்த நிலங்களை பாரம்பரிய முறையில் நில அளவை செய்து, வரைபடம் தயாரிக்கப்படும்.
இந்த வழிமுறையே இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இதில் ஒவ்வொரு பகுதியும் நகர்ப்புறமாக வளர்ச்சி அடையும் நிலையில், நகர நில அளவை மேற்கொள்வது வழக்கம்.
இந்த வகையில், சென்னை உள்ளிட்ட சில மாநகராட்சிகள், 15 ஆண்டுகளுக்கு முன் நகராட்சிகளாக இருந்த பகுதிகளில் மட்டும், நில அளவை முடிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் நகர நில அளவை மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதிகளில் நிலங்கள் இன்னும் ஊரக பகுதிக்கான வகைபாட்டிலேயே உள்ளன.
இதனால், புதிதாக கட்டட அனுமதி பெறுவது உள்ளிட்ட பணிகளில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே, புதிதாக நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பகுதிகளில், நகர நில அளவை பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நில அளவை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், ஆவடி தவிர்த்து, 12 மாநகராட்சிகளில் நகர நில அளவை பணிகள், சில ஆண்டுகளுக்கு முன் துவங்கின. ஆறு புதிய மாநகராட்சிகள், 26 நகராட்சிகளில் நகர நில அளவை பணிகள் நிலுவையில் உள்ளன.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களிலும் இதற்கான மனுக்கள் வந்துள்ளன.
இதையடுத்து, புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சிகளில், நகர நில அளவை பணிகளை மேற்கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.